உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நேரம் வரும்போது சிவகுமார் முதல்வராவார் விவசாய அமைச்சர் செலுவராயசாமி பேட்டி

நேரம் வரும்போது சிவகுமார் முதல்வராவார் விவசாய அமைச்சர் செலுவராயசாமி பேட்டி

மாண்டியா: ''நேரம் வரும்போது சிவகுமார் முதல்வராவார்,'' என்று, விவசாய அமைச்சர் செலுவராயசாமி கூறி உள்ளார். மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி: தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு எதிராக அவதுாறு பரப்புவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறுகின்றனர். கோவில் மீது பல ஆண்டுகளாக அவதுாறு பரப்பப்படுகிறது. பா.ஜ., ஆட்சியில் சவுஜன்யா என்ற மாணவி இறந்த போது கூட, கோவில் மீதும், நிர்வாகிகள் மீதும் அவதுாறு பரப்பப்பட்டது. அப்போது பா.ஜ., தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர். தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., அமைத்த போது, பா.ஜ., தலைவர்கள் முதலில் அமைதியாக இருந்தனர். பள்ளம் தோண்டி எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், கோவிலுக்கு ஆதரவாக இருப்பது போன்று அரசியல் செய்கின்றனர். எஸ்.ஐ.டி., அமைத்ததன் மூலம், தர்மஸ்தலாவுக்கு எதிராக பரப்பட்ட அவதுாறுகளுக்கு காங்கிரஸ் அரசு முற்றுப்புள்ளி வைத்து உள்ளது. இனியாவது அரசியல் செய்வதை பா.ஜ., நிறுத்த வேண்டும். பா.ஜ.,வில் இணைய வேண்டும் என்று இருந்தால், சிவகுமார் எப்போதோ அந்த கட்சியில் சேர்ந்து இருப்பார். காங்கிரசில் வலுவான இடத்தை பிடித்து உள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர், துணை முதல்வராக தனது பணியை சிறப்பாக செய்கிறார். அவர் எதற்காக பா.ஜ.,வில் சேர வேண்டும். நேரம் வரும் போது காங்கிரஸ் சார்பில் அவர் முதல்வர் ஆவார். இதுபற்றி மேலிட தலைவர்கள் உரிய நேரத்தில் முடிவு எடுப்பர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ