உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வெள்ள பாதிப்புக்கு காரணம் யார்? புட்டு புட்டு வைத்த வல்லுநர்கள்!

வெள்ள பாதிப்புக்கு காரணம் யார்? புட்டு புட்டு வைத்த வல்லுநர்கள்!

பெங்களூரு : 'பெங்களூரில் சாலைகள் ஆறுகளாகவும், ஏரிகளாகவும் மாறி, வீடுகளில் வெள்ளம் புகுகிறது. இந்த பிரச்னை இயற்கை சீற்றங்களால் ஏற்பட்டதல்ல. அதிகாரிகள், மனிதர்களால் உருவான பிரச்னை' என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் சில நாட்களாக, மழை பெய்கிறது. சாய் லே - அவுட், கோரமங்களா உட்பட, பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. வீடுகளில் நீர் புகுந்ததால், மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சமடையும் சூழ்நிலை உருவானது. மின்சாரம் இல்லாமல், காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல், மக்கள் அவதிப்பட்டனர்.

முதன் முறையல்ல

இத்தகைய பிரச்னை ஏற்படுவது, முதன் முறையல்ல. ஒவ்வொரு ஆண்டு மழைக் காலத்திலும், மக்கள் அவதிப்படுவது சகஜம். மழைக்காலம் துவங்கும் முன், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், 'மழைக் காலத்தை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சாக்கடைகள், மழைநீர் கால்வாய்களில் மண், கழிவுகள் அகற்றி, மழை நீர் பாய வழி செய்வோம். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் பார்த்து கொள்வோம்' என உறுதி அளிக்கின்றனர்.

காட்டம்

ஆனால் எந்த மழைக் காலத்திலும், அவர்கள் கூறியபடி, நடவடிக்கை எடுத்தது இல்லை. இதன் விளைவாக மக்கள் அவதிப்படுகின்றனர்.மழை சேதங்களை தடுப்பதாக கூறி, கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகின்றனர். ஆனால், மழை சேதங்கள் முடிவுக்கு வரவில்லை. இந்த பணம் என்ன ஆனது என, மக்கள் காட்டமாக கேள்வி எழுப்புகின்றனர்.மக்கள் அனுபவிக்கும் பிரச்னை, இயற்கை சீற்றங்களால் ஏற்பட்டதல்ல. மனிதர்களால் உருவான பிரச்னை என, வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளனர்.பெங்களூரில் சாதாரண மழை பெய்தாலும், வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மழைக்காலத்துக்கு முன்பே, மழை நீர்க்கால்வாய், சாக்கடைகளில் மண், கழிவுகளை அகற்றி பழுது பார்க்க வேண்டும். இதை மாநகராட்சி அதிகாரிகள் செய்வது இல்லை.மழை பெய்து அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மட்டுமே, மழை நீர்க்கால்வாய் ஆக்கிரமிப்பு விஷயம், அரசு மற்றும் அதிகாரிகளின் கண்களுக்கு தெரிகிறது. மழை நின்றவுடன் மவுனமாகின்றனர்பெங்களூரில் 860 கி.மீ., தொலைவிலான மழை நீர்க்கால்வாய் இணைப்பு உள்ளது. கால்வாய்களை ஆக்கிரமித்தது, இவற்றின் இயற்கையான பாதையை மாற்றும் காரணங்களால், மழைநீர் பாய்ந்து செல்ல வழியில்லாமல், குடியிருப்புகளுக்குள் புகுந்து, அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறது.பெங்களூரு காங்கிரீட் காடாக மாறுகிறது. மழை நீர் பூமியில் இறங்க வழியில்லை. பூங்காக்களை தவிர, மற்ற நிலப்பரப்பில் தார் பூசப்பட்டுள்ளது. காங்கிரீட் மயமாகியுள்ளது. ஏரிகள் மாயமாகின்றன. எனவே பூமியில் பெய்யும் மழை, எங்கும் நிற்காமல் தாழ்வான பகுதிகளுக்கு பாய்கிறதுபெங்களூரில் ஆண்டு தோறும், 90 செ.மீ., மழை பெய்கிறது. இதன் மூலம் 18 டி.எம்.சி., தண்ணீர் சேகரிக்க முடியும். ஆனால் மழை நீரை சேகரிக்க சரியான வசதி இல்லை. ஓடும் நீரை தடுத்து நிறுத்த, ஆழ் துளைகள் அமைக்கவில்லை. மண் கால்வாய்களை, காங்கிரீட் மயமாக்குவதும், வெள்ளப்பெருக்குக்கு காரணமாகிறது.ஒரு காலத்தில், பெங்களூரில் ஆயிரக்கணக்கான ஏரிகள் இருந்தன. ஆனால் நகர்மயமானதால் ஏரிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தன. தற்போது பெங்களூரு மாநகராட்சி கட்டுப்பாட்டில் 183 ஏரிகள் உள்ளன. இவைகளும் மண், கழிவு நீர் கலந்துள்ளது. மழை நீரை சேகரிக்கும் நிலையில் ஏரிகள் இல்லை.

மேகதாது அணை தேவையில்லை!

சுற்றுச்சூழல் வல்லுநர் ராமசந்திரா கூறியதாவது:பெங்களூரில் 43 ஏரிகள் லே - அவுட்கள், பஸ் நிலையங்கள், விளையாட்டு மைதானங்களாக மாறியுள்ளன. ஏரி நிலத்தில் வானுயர்ந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நெல், சோளம் விளைந்த நிலம், இப்போது லே - அவுட்களாக மாறியுள்ளன.இயற்கையான கால்வாய் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கன மழை பெய்யும் போது, வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்த கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மழை நீர் பூமியில் இறங்க வழியே இல்லை. ஏரிகளில் வீடுகள் கட்டிக்கொண்டு, வெள்ளத்துக்கு அஞ்சுவது சரியா.பெங்களூரில் போதுமான மழை பெய்கிறது. மழை நீரை சேகரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆண்டு தோறும் 50.0 செ.மீ., மழை நீரை சேகரிக்கலாம். அப்படி செய்தால் எத்தினஹொளே, மேகதாது அணை திட்டமே தேவையில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை