ஸ்மார்ட் மீட்டர் கட்டணம் அதிகம் ஏன்? கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
பெங்களூரு : கர்நாடகாவில் மின் இணைப்புக்கான ஸ்மார்ட் மீட்டர்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் புதிய மின் இணைப்பு பெறும்போது ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவது கட்டாயம் என, பிப்., 13ல் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, தொட்டபல்லாபூரை சேர்ந்த ஹரிஷ், ஜெயலட்சுமி ஆகியோர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பு வக்கீல் லட்சுமி அய்யங்கார் வாதிட்டதாவது:ஸ்மார்ட் மீட்டர்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என்ற உத்தரவு, கே.இ.ஆர்.சி., எனும் கர்நாடக மின் ஒழுங்குமுறை கமிட்டி வழிகாட்டுதலுக்கு எதிரானது. மேலும், இந்த ஸ்மார்ட் மீட்டர்களின் விலையும் அதிகமாக உள்ளது. இது நுகர்வோருக்கு சுமையாக இருக்கும்.புதிய மின் இணைப்பு பெறுவதற்கு ஸ்மார்ட் மீட்டர்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என்ற உத்தரவையும், மனுதாரரின் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும்படி பெஸ்காம் அனுப்பிய கடிதத்தையும் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.அரசு தரப்பு வக்கீல் அட்வகேட் ஜெனரல் சசிகரன் ஷெட்டா வாதிடுகையில், ''கே.இ.ஆர்.சி.,யின் வழிகாட்டுதலின்படி தான், மாநில அரசும், பெஸ்காமும் செயல்படுகின்றன. இந்த உத்தரவு, புதிதாக வீடு கட்டுவோருக்கு மட்டுமே பொருந்தும். அதுமட்டுமின்றி, இது 'போஸ்ட் பெய்டு' முறையில் இருக்கும்,'' என்றார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாகபிரசன்னா கூறியதாவது:கே.இ.ஆர்.சி.,யின் வழிகாட்டுதல்படி, ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும். பிரீபெய்டு, போஸ்ட் பேய்டு குறித்து நுகர்வோருக்கு தெளிவுபடுத்த வேண்டும். விதிகளில் உள்ள குழப்பம் குறித்து, மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால், இப்பிரச்னை எழாது.அண்டை மாநிலங்களில் 'த்ரீ பேஸ்' ஸ்மார்ட் மீட்டர் 900 ரூபாய்க்கு கிடைக்கும்போது, கர்நாடகாவில் 'த்ரி பேஸ்' ஸ்மார்ட் மீட்டருக்கு 10,000 ரூபாய் வசூலிக்கப்படுவது ஏன்? இதுகுறித்து விளக்கமாக அறிக்கை தாக்கல் செய்து, இன்று சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.