கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம் மகளை கொன்று தந்தை தற்கொலை
கோலார்: மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிப்போனதால், குடும்ப மரியாதைக்கு அஞ்சி, மகளுடன் கணவர் தற்கொலை செய்து கொண்டார். கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவின், முடியநுார் கிராமத்தில் வசித்தவர் லோகேஷ், 32. இவரது மனைவி நவ்யாஸ்ரீ, 26. தம்பதிக்கு நிஹாரிகா, 5, என்ற பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன், நவ்யாஸ்ரீக்கு அதே கிராமத்தின் முரளி என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவரை ஏமாற்றிவிட்டு, அவ்வப்போது கள்ளக்காதலரை சந்தித்துள்ளார். இதை அறிந்து மனம் நொந்த லோகேஷ், மனைவியை கண்டித்து அறிவுரை கூறினார். ஆனால், மனைவி திருந்தவில்லை. மூன்று நாட்களுக்கு முன், கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்த பணம், தங்க நகைகளை எடுத்து கொண்டு, கள்ளக்காதலனுடன் ஓடி விட்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'எனக்கு, உங்களுடன் வாழ விருப்பம் இல்லை. என்னை என் போக்கில் விட்டு விடுங்கள். உங்களை பொறுத்த வரை, நான் செத்துவிட்டேன்' என தெரிவித்திருந்தார். மனைவியின் செயலால் குடும்ப மானம் பறிபோகும் என, லோகேஷ் அஞ்சினார். மனைவி காணாமல் போனதாக, முல்பாகல் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் நவ்யாஸ்ரீயை தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று முன் தினம் நள்ளிரவு, தன் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த லோகேஷ், உடலை காரில் வைத்து கொண்டு, வீட்டில் இருந்து கிளம்பினார். முடியநுார் அருகில் உள்ள, பி.யு.சி., கல்லுாரி எதிரே காரை நிறுத்தினார். அங்கிருந்த மரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை இதை கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த முல்பாகல் ஊரக போலீசார், தந்தை, மகளின் உடல்களை மீட்டனர். நவ்யாஸ்ரீ, முரளியை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.