உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 3வது மயக்க ஊசியில் பிடிபட்ட காட்டெருமை

3வது மயக்க ஊசியில் பிடிபட்ட காட்டெருமை

ஹாசன் : பெண்ணின் விலா எலும்பை முறித்து, வனத்துறையினருக்கு ஆட்டம் காட்டிய காட்டெருமை, மூன்றாவது முறை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். குடகு மாவட்டம், மடிகேரியில் அதிகளவில் தென்படும் காட்டெருமை, நேற்று முன்தினம் ஹாசன் மாவட்டம் சென்னராயபட்டணாவில் தென்பட்டது. உணவு தேடி நகருக்குள் புகுந்த காட்டெருமையை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிக்கமகளூரு, பண்டிப்பூரை சேர்ந்த கால்நடை மருத்துவர், மயக்க ஊசி செலுத்துபவர்களை சென்னராயபட்டணா வனத்துறை அதிகாரி காலந்தர் வரவழைத்தார். மாவட்டத்தின் ஒன்பது மண்டல துணை வன அதிகாரிகளும் வந்திருந்தனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டெருமை, கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டது. சிறிது நேரத்தில் கண் விழித்த காட்டெருமை, லாரியில் இருந்து கீழே பாய்ந்தது. இதை பார்த்த அதிகாரிகள், பொது மக்கள் அலறி அடித்து ஓடினர். அப்போது மயக்க ஊசி செலுத்தும் 'சூட்டர்', மீண்டும் துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தினார். காட்டெருமை மயக்கம் அடையாமல், அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டே இருந்தது. இதே நிலை மாலை வரை தொடர்ந்தது. உணவின்றி சுற்றித்திரிந்ததால் சோர்வடைந்த காட்டெருமைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயங்கிய காட்டெருமை, மீண்டும் லாரியில் கூண்டில் ஏற்றப்பட்டது. இதனால் பொது மக்கள் நிம்மதி அடைந்தனர். வனத்துறை அதிகாரி காலந்தர் கூறியதாவது: சென்னராயபட்டணா பயலுசீமாவில் முதன் முறையாக காட்டெருமை வந்து உள்ளது. பாகூர் சாலைக்கு வந்த 7 வயதான காட்டெருமை, அங்கு நடந்து சென்று கொண்டிருந்த சாந்தம்மா என்ற பெண்ணை முட்டியது. இதில் அவரது விலா எலும்பு முறிந்ததுடன், இடது கால் செயல் இழந்துள்ளது. தற்போது பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எங்களுக்கு தகவல் கிடைத்ததும் அங்கு சென்று காட்டெருமையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். மயக்கம் அடைந்தது. மயக்கம் தெளிய ஊசி போடப்பட்டது. இதனால் கண் விழித்த காட்டெருமை, லாரியில் இருந்து குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் மேலும் இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தி பிடித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை