ஹனி டிராப்பில் உண்மை வெளிவருமா? மத்திய அமைச்சர் குமாரசாமி சந்தேகம்!
மாண்டியா : ''ஹனி டிராப் விவகாரத்தில் உண்மை வெளிவருமா என்பது சந்தேகம் தான்,'' என மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாராசமி மாண்டியாவில் நேற்று அளித்த பேட்டி:காங்கிரஸ் அரசு வெறுப்பு அரசியலை செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் பொறாமை குணம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் என்னை, மாநிலத்தில் பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.'ஹனி டிராப்' விவகாரத்தில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், முதல்வர் சித்தராமையா ஆகியோரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதில் யாருடையை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது, என்ன கண்டுபிடிக்கப்பட்டது, உண்மை வெளிவருமா என்பது சந்தேகமாகவே உள்ளது.காங்கிரஸ் அமைச்சரே 'சிடி', பென் டிரைவ்கள் தயாரிக்கும் மாநிலம் என கூறியுள்ளார். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.காங்கிரஸ் அரசில் நடந்த முறைகேடுகள் குறித்து ஏராளமான ஆவணங்கள் உள்ளன. இதன் காரணமாகவே என்னை பேச விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.ஒரு முன்னாள் பிரதமரின் மகன், இரண்டு முறை முதல்வர், மத்திய அமைச்சர் என கூட பார்க்காமல் எனக்கு எதிராக அநீதிகளை, தொடர்ந்து காங்கிரஸ் அரசு எடுத்து வருகிறது.வரிச்சுமையால் மக்கள் திணறி வருகின்றனர். மாண்டியாவில் மருத்துவ கல்லுாரியை கொண்டு வந்தேன் என்பதை யாரும் மறக்க வேண்டாம். செலுவராயசாமியின் கேள்விக்கு எல்லாம் நான் பதிலளிக்க வேண்டுமா. அவருக்கு முதலில் ஐ.ஐ.டி., என்றால் என்னவென்று தெரியுமா.செலுவராயசாமியை அமைச்சராக்கியது நானே. அந்த பாவத்தை செய்தது நான் தான். முதல்வராக இருந்தபோது செய்த அனைத்தையும் நினைவில் வைத்து உள்ளேன். இப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. பா.ஜ., - ம.ஜ.த., இடையே எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.