உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வாட்டாள் நாகராஜ் பந்த்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்குமா? அரசு தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

வாட்டாள் நாகராஜ் பந்த்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்குமா? அரசு தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், மஹாராஷ்டிரா எல்லையில் உள்ளது. இங்கு மராத்தியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இதன் காரணமாக, கன்னடர்களுக்கும், மராத்தியர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்.கடந்த மாதம் 21ம் தேதி, கர்நாடக அரசு பஸ்சின் நடத்துநர் மஹாதேவப்பா, 51, என்பவரை சில மராத்தியர்கள் தாக்கினர். மேலும், அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இது, கர்நாடகா முழுதும் அதிர்வலைகளை எழுப்பியது.

காரணம்

இதன் காரணமாக, கர்நாடகா, மஹாராஷ்டிரா வாகனங்களின் மீது கருப்பு மை பூசுவது, டிரைவர்கள், நடத்துநரை அசிங்கப்படுத்துவது என இரு தரப்பினரும் செய்து வந்தனர். இதன்பின், நடத்துநர் மீதான போக்சோ வழக்கு வாபஸ் பெறப்பட்டது. பிறகு, எல்லையில் பிரச்னை தீர்ந்தது.இச்சம்பவத்தை கண்டித்து கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று மாநிலம் தழுவிய, 'பந்த்'துக்கு அழைப்பு விடுத்தார். மேலும், மராத்திய அமைப்பான எம்.இ.எஸ்., அமைப்பை தடை செய்யவும், கன்னடர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை கண்டித்தும் இந்த பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். 'பந்த் அன்று டிரைவர்கள், நடத்துநர்கள் யாரும் வேலைக்கு செல்ல கூடாது' எனவும் வேண்டுகோள் விடுத்தார்.பந்த் இன்று காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்க உள்ளது. காலை 10:30 மணிக்கு பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து, சுதந்திர பூங்கா வரை பேரணி நடத்தப்பட உள்ளது.

ஆதரவு

இந்த பந்த்திற்கு கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., விமான நிலைய டாக்சி, ஓலா, ஊபர், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஹோட்டல் சங்கத்தினர், தனியார் போக்குவரத்து சங்கம் தார்மீக ஆதரவு மட்டும் தெரிவித்து உள்ளனர். இதனால், ஹோட்டல்கள், தனியார் பஸ்கள் இயங்கும் என கூறப்படுகிறது.ஆனால், அரசு பஸ்கள், ஓலா, ஊபர், ஆட்டோக்கள் இன்று இயங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. அதே சமயம், மெட்ரோ ரயில், பள்ளி, கல்லுாரிகள், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவமனைகள் ஆகியவை வழக்கம் போல இயங்கும். பேக்கரி, திரையரங்குகள் மதியம் வரை இயங்காது என கூறப்படுகிறது.இந்த பந்த்துக்கு ரூபேஷ் ராஜண்ணா பிரிவு, சிவராமகவுடா பிரிவு, கர்நாடக மக்கள் மன்றம், டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்றம், துணிச்சலான கன்னட படை போன்ற 3,000 சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

பின்னடைவு

அதே நேரம், கன்னட அமைப்புகளில் முக்கிய அமைப்பான கர்நாடக ரக் ஷண வேதிகே சங்கம் பந்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மாணவர் நிலை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. ஆனால், அதிர்ஷடவசமாக இன்று அவர்களுக்கு தேர்வு கிடையாது. இருப்பினும், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பந்த்தால் பாதிக்கப்பட கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லுாரிகளுக்கு வரும்படி அறுவுறுத்தப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியதாவது:அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மெஜஸ்டிக், சுதந்திர பூங்கா, மைசூரு வங்கி சதுக்கத்தை சுற்றி கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கட்டாயப்படுத்தி வேலை நிறுத்தங்களில் ஈடுபடக் கூடாது. அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை பந்த் நடத்தியவர்களே ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை