உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கடனை திருப்பி கேட்ட பெண் கொலை: சிறுவன் உட்பட மூவர் கைது

கடனை திருப்பி கேட்ட பெண் கொலை: சிறுவன் உட்பட மூவர் கைது

பெங்களூரு: கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணை, கொலை செய்த தாய், மகள் உட்பட, மூவர் கைது செய்யப்பட்டனர்.பெலகாவி நகரின் கணேஷ்புராவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் அஞ்சனா தட்டீகர், 52. இவர் தனக்கு அறிமுகம் உள்ள நபர்களுக்கு, வட்டிக்கு கடன் கொடுப்பது வழக்கம். அதேபோன்று, பெலகாவி நகரில் வசிக்கும் ஜோதி பாந்தேகர், 40, என்பவரும் 15,000 ரூபாய் கடன் வாங்கினார்.பல நாட்களாகியும் பணத்தை திருப்பி தரவில்லை. அஞ்சனா பலமுறை கேட்டும் பொருட்படுத்தவில்லை.ஏப்ரல் 22ம் தேதி கடன் விஷயமாக பேச, ஜோதி தன் மகள் சுஹானி, 20, மற்றும் 16 வயது மகனுடன் அஞ்சனா வீட்டுக்கு வந்தார். பணத்தை திருப்பி தராமல் இழுத்தடிப்பது குறித்து, அவர் கேள்வி கேட்டார்.இவ்வேளையில், ஜோதியும், அவரது பிள்ளைகளும் அஞ்சனாவை சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் காயமடைந்து அவர் உயிரிழந்தார்.அதன்பின் யாருக்கும் சந்தேகம் வராமல், மர்ம கும்பல் கொள்ளையடித்ததாக நம்ப வைக்கும் நோக்கில், அவர் உடலில் அணிந்திருந்த 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிக்கொண்டு, தாயும், பிள்ளைகளும் தப்பி சென்றனர்.இது குறித்து, அஞ்சனாவின் குடும்பத்தினர், பெலகாவி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் விசாரணையை துவக்கினர்.அஞ்சனாவுக்கு அறிமுகம் உள்ளவர்கள், உறவினர்கள், அக்கம், பக்கத்தினர் என, பலரிடம் விசாரணை நடத்தினர். அதே போன்று ஜோதியிடமும் விசாரணை நடந்தது. ஆனால் அவர் சம்பவம் நடந்த நாளன்று, ஊரிலேயே இல்லை என, நாடகமாடினார்.சம்பவ இடத்தின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில், ஜோதி, தன் மகள், மகனுடன் அங்கு வந்த காட்சி பதிவாகியிருந்தது.சந்தேகத்தின் அடிப்படையில் அவரை விசாரணை நடத்திய போது, அஞ்சனாவை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். தாயையும், மகளையும், மகனையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை