வேலை செய்த வீட்டில் திருடிய பெண் ரூ.51 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு
ஜே.பி.நகர்: கடந்த 15 ஆண்டுகளாக, வேலை செய்த வீட்டில் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். 51.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்களை மீட்டனர். பெங்களூரு, ஜே.பி.நகர், 2வது ஸ்டேஜில் வசிக்கும் குடும்பத்தினர் வீட்டில், 40 வயது பெண்ணொருவர் வேலை செய்தார். 15 ஆண்டுகளாக பணியாற்றியதால், வீட்டு உரிமையாளர்கள் அந்த பெண் மீது, அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. தங்க நகைகள் அணிந்து செல்லும் நோக்கில், பீரோவை திறந்தபோது, நகைகள், வெள்ளிப்பொருட்கள், ஒரு லட்சம் ரொக்கம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவின் மீது சாவியை வைத்திருந்தனர். வேலை செய்யும் பெண், 20 நாட்களாக வேலைக்கு வரவில்லை. 15 ஆண்டுகளாக வேலை செய்வதால், அவர் திருடியிருக்க மாட்டார் என, நினைத்தனர். இதுகுறித்து, ஜே.பி., நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கினர். சந்தேகத்தின் அடிப்படையில், அவரை தேடியபோது, புட்டேனஹள்ளியின், கல்லுாரி அருகில் உள்ள தன் அக்காவின் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, விசாரணை நடத்திபோது, திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், அப்பெண் பல்வேறு கடைகளில் அடமானம் வைத்திருந்த 51.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 458 கிராம் தங்கநகைகள், 3.868 கிலோ வெள்ளி பொருட்களை கைப்பற்றினர். வீட்டின் பீரோவுக்கு கள்ளச்சாவி தயாரித்து, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஒவ்வொன்றாக திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.