ஆழ்துளை கிணற்றில் பெண் உடல் மீட்பு
சிக்கமகளூரு: கணவரால் கொலை செய்யப்பட்டு, ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட பெண்ணின் உடல் 12 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. சிக்கமகளூரின் கடூர் தாலுகா அலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய், 30. இவரது மனைவி பாரதி, 28. வரதட்சணை வாங்கி வர மறுத்ததால், கடந்த மாதம் 4ம் தேதி தலையில் கட்டையால் அடித்து, பாரதியை விஜய் கொலை செய்தார். பின், விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பாரதி உடலை, விஜய், அவரது தந்தை கோவிந்தப்பா, தாய் தாயம்மா வீசினர். மனைவி காணாமல் போனதாக போலீசில் விஜய் பொய் புகார் அளித்தார். 'மனைவி பேயாக வந்து என்னை பயமுறுத்தக் கூடாது. என் குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது' என்று, செக்கராயப்பட்டணாவில் உள்ள சவுடேஸ்வரி கோவில் மரத்தில், தகட்டில் எழுதி கட்டியதால், விஜய் சிக்கிக் கொண்டார். கடந்த 12ம் தேதி விஜய், அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டனர். பாரதி உடல் வீசப்பட்ட ஆழ்துளை கிணற்றை அடையாளம் காட்டினர். கடூர் தாசில்தார் முன்னிலையில், ஆழ்துளை கிணற்றில் இருந்து பாரதி உடலை வெளியே எடுக்கும் பணி, கடந்த 18ம் தேதி துவங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. 18ம் தேதியும், நேற்று முன்தினமும் தோண்டியும் உடல் கிடைக்கவில்லை. மூன்றாவது நாளாக நேற்று நடந்த பணியின் போது, ஆழ்துளை கிணற்றில் 12 அடி ஆழத்தில், பாரதி உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை முடித்து, உடலில் சில பாகங்கள் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.