மஞ்சள் எச்சரிக்கை!: மே 17 வரை 6 மாவட்டங்களில் மிதமான மழை: சுட்டெரிக்கும் அக்னி வெயிலுக்கு ஆறுதல் பரிசு
கோடை காலம் துவங்கிய நாளில் இருந்து அவதிப்பட்டு வந்த மாநில மக்களை மேலும் வாட்டும் வகையில், அக்னி நட்சத்திரம் துவங்கி விட்டது. குடையோ, தொப்பியோ இல்லாமல் வெளியே நடந்து செல்ல முடிவதில்லை.வெப்பத்தின் தாக்கத்தால், வட மாவட்டங்களில் அரசு பணி நேரம் மாற்றப்பட்டு உள்ளது. சுட்டெரிக்கும் அக்னி வெயிலுக்கு ஆறுதலாக, மே 17ம் தேதி வரை மாநிலத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. நிம்மதி
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1 கி.மீ., உயரத்தில், இந்த கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, பெங்களூரு நகரம், பெங்களூரு புறநகர், துமகூரு, கோலார், கலபுரகி, சிக்கபல்லாபூர் மாவட்டங்களில், மே 17ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.வட மாவட்டத்தின் உட்புறத்தில் பாகல்கோட், பெலகாவி, தார்வாட், கதக், ஹாவேரி, ராய்ச்சூர், கொப்பால், யாத்கிர், விஜயபுரா, பீதர், ஹாவேரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.காற்றுடன் மழை பெய்வதால் மரங்கள் சாய்வதுடன், மரக்கிளைகள் உடைந்து விழும். வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் சாயும். வீடுகள், சுவர்கள், குடிசைகள் பாதிக்கப்படும்.கனமழை பெய்தால் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுங்கள். வீட்டிற்குள் கதவு, ஜன்னல்களை மூடிக் கொள்ளுங்கள். வெளியே செல்வதை தவிர்க்கவும். மரங்களின் அடியில் நிற்க வேண்டாம். சிமென்ட் தரையில் நிற்கவோ, சுவர் அருகில் நிற்கவும் வேண்டாம்.மின்சார போர்டுடன் எலக்ட்ரானிக் பொருட்கள் ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்தால் அகற்றிவிடுங்கள். ஏரி, குளத்தின் அருகில் இருந்தால் அங்கிருந்து சென்றுவிடுங்கள்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இருவர் பலி
பீதர், பெலகாவி, சித்ரதுர்கா, சிக்கமகளூரு, ஹாவேரி, கொப்பால், ஷிவமொக்கா, உத்தர கன்னடா, யாத்கிர் மாவட்டங்களில் நேற்று மாலை லேசான மழை பெய்தது.இதற்கிடையில், பெலகாவி மாவட்டம், சவதத்தியின் ஹிட்டங்கி கிராமத்தை சேர்ந்த கங்கவ்வா, கலாவாதி ஆகியோர் கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்றனர். தீவனம் எடுத்து கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இருவர் மீதும் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். நேற்று மாலை பெங்களூரு சிக்கஜாலாவில் கன மழை பெய்தது. அதுபோன்று, குடகு மாவட்டம், சோம்வார்பேட்டில் நேற்று மாலை கனமழை பெய்தது. திடீரென பெய்த மழையால், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைந்து, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.