மும்பை: இந்தியாவில், ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 63 சதவீதம் அதிகரித்து உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மும்பையைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசனை மற்றும் ஆய்வு அமைப்பான 'சென்ட்ரம்', இந்தியர்களின் வருமானம், சொத்துக்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2019- - 2024 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில், கோடிகளில் வருமானம் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, 10 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவோர் எண்ணிக்கை, 63 சதவீதம் அதிகரித்து, 31,800 ஆகவும்; 5 கோடி ரூபாய்க்கு மேல் பெறுவோர் எண்ணிக்கை, 49 சதவீதம் அதிகரித்து, 58,200 ஆகவும், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவோர் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து, 10 லட்சமாகவும் அதிகரித்து உள்ளது. இதே போல், கடந்த ஐந்து ஆண்டுகளில், 10 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவோரின், ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 121 சதவீதம் வளர்ச்சி விகிதத்துடன், 38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவோரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 106 சதவீதம் வளர்ச்சி விகிதத்துடன், 40 லட்சம் கோடி ரூபாயாகவும்; 50 லட்சம் ரூபாய் மேல் வருமானம் ஈட்டுவோரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 64 சதவீதம் வளர்ச்சி விகிதத்துடன், 49 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது. வருமானம், சொத்து ஆகியவை நன்கு வளர்ச்சி அடைந்த போதிலும், இந்தியாவில் நிதிச் சொத்துக்கள் 15 சதவீதம் மட்டுமே தொழில்முறையாக நிர்வகிக்கப்படுகிறது. இதுவே, வளர்ந்த நாடுகளில், 75 சதவீதம் தொழில்முறையாக நிர்வகிக்கப்படுகின்றன. 2023 முதல் -2028ம் ஆண்டு வரையிலான நிதியாண்டுகளில், அதிக வருமானம் மற்றும் சொத்து மதிப்பு கொண்டவர்கள், ஆண்டுக்கு 13 முதல் 14 சதவீதம் வரை அதிகரிப்பர் என கணிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.