செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி 7 காலாண்டுகளில் இல்லாத சரிவு ரிசர்வ் வங்கியின் 7சதவீதம் கணிப்பு தவறியது
புதுடில்லி, நவ. 30-நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டான, ஜூலை முதல் செப்டம்பர் வரையான முன்று மாதங்களில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.40 சதவீதமாக குறைந்து உள்ளது.இந்த காலாண்டில், நாட்டின் வளர்ச்சி ஏழு சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்த நிலையில், தேசிய புள்ளிவிபர அலுவலகம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், 1.60 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தி, சுரங்கத் துறைகளில் நிலவிய மந்தநிலையே, ஜி.டி.பி., குறையக் காரணமாக கூறப்படுகிறது.கடந்த நிதியாண்டு செப்டம்பர் காலாண்டின் 8.1 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், தற்போது 2.70 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், 2022 அக்டோபர் - டிசம்பர் காலாண்டின் 4.60 சதவீத வளர்ச்சிக்குப் பின், மிகப் பெரிய காலாண்டு வளர்ச்சி சரிவு இதுவாகும்.கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் 14.30 சதவீதமாக இருந்த உற்பத்தித் துறை வளர்ச்சி, தற்போது 2.20 சதவீதமாகவும்; 11.10 சதவீதமாக இருந்த சுரங்கத் துறை வளர்ச்சி 0.01 சதவீதமாகவும் குறைந்ததே, ஜி.டி.பி., குறைய முக்கிய காரணமானது. எனினும், செப்டம்பர் காலாண்டில், சீனப் பொருளாதாரம் 4.60 சதவீத வளர்ச்சி கண்ட நிலையில், 5.40 சதவீத வளர்ச்சியுடன், உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடு என்ற முதலிடத்தை இந்தியா தக்கவைத்துள்ளது.
கடன் வளர்ச்சி
தொழிற்துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன், அக்டோபரில் 8 சதவீத வளர்ச்சி கண்ட நிலையில், 2023 அக்டோபரில் அது 4.80 சதவீதமாக இருந்தது. தனிநபர் கடன் வளர்ச்சி 18 சதவீதத்தில் இருந்து 15.80 சதவீதமாக குறைந்தது.