5 ஆண்டு எதிர்பார்ப்பை நிறைவேற்றிய ஆர்.பி.ஐ., வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையும்
மும்பை:கடந்த ஐந்து ஆண்டுகளாக அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்த ரெப்போ வட்டி விகித குறைப்பை, ரிசர்வ் வங்கி இந்தமுறை அறிவித்துள்ளது. வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.25 சதவீதமாகியுள்ளது. இதனால், வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டியை, வங்கிகள் சிறிது குறைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், டிபாசிட்டுகளுக்கான வட்டியும் குறையக்கூடும். ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான பணக்கொள்கை குழு, மூன்று நாள் ஆலோசனை நடத்தியது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அவற்றில் முக்கிய அம்சங்கள் வருமாறு: பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, ரெப்போ விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக, கால் சதவீதம் குறைப்பு கடந்த 2020 மே மாதத்துக்குப் பின், அதாவது ஐந்து ஆண்டுகளில் முதலாவது வட்டி குறைப்பு இது வங்கிகள் பராமரிக்கும் தொகைக்கு ஆர்.பி.ஐ., வழங்கும் வட்டியான ரிவர்ஸ் ரெப்போ 3.35% ஆக நீடிக்கும் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதமான சி.ஆர்.ஆர்., 4 சதவீதமாக நீடிக்கும் வரும் ஏப்ரலில் துவங்கும் அடுத்த நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி 6.70 சதவீதமாக இருக்கும் எனக் கணிப்பு நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.40 சதவீதமாக இருக்கும் எனக் கணிப்பு வரும் நிதியாண்டில் பணவீக்கம் பெரிய அதிர்வுகள் இல்லாவிடில், 4.20 சதவீதமாக இருக்கும் புவி அரசியல், வர்த்தக கொள்கை, நிதி சந்தை தள்ளாட்டம் ஆகியவை முக்கிய பிரச்னைகள்.வங்கிகளுக்கு புது டொமைன்
நிதிப் பரிவர்த்தனைகளில் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், 'பேங்க் டாட் இன், பின் டாட் இன்' என்ற இரண்டு டொமைன்களை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி, வங்கிகள் அனைத்தும், பேங்க் டாட் இன் என்றும் நிதி நிறுவனங்கள் பின் டாட் இன் என்றும் முடியும் இணைய தளங்களை நிறுவ வேண்டும். பேங்க் டாட் இன் என்ற டொமைன், வங்கிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும்; அவற்றை வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் காணவும்; சேவைகளை பாதுகாப்பாக பெறவும் உதவும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வங்கித் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஐ.டி.ஆர்.பி.டி., இந்த டொமைன்களை, வங்கிகள் வரும் ஏப்ரல் முதல் பதிவு செய்ய ஆர்.பி.ஐ., அதிகாரம் அளித்துள்ளது.கரன்சி பாலிசி மாறாது
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, தொடர் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், ரூபாய் மதிப்புக்கென இலக்கோ, குறிப்பிட்ட அளவு அல்லது நிர்ணயமோ ஏதும் இல்லை என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நாட்டின் கரன்சி கொள்கை மாற்றமின்றி நீடிப்பதாக கூறிய ஆர்.பி.ஐ., கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரூபாய் மதிப்பில் அதிக ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது, அதைக் கட்டுப்படுத்த மட்டுமே தலையிடுவது வழக்கம் என்றார். சந்தைகள் தான் நாட்டின் கரன்சி மதிப்பை நிர்ணயிக்கின்றன; அதை கண்காணித்து, தேவைப்பட்டால் மட்டுமே ஆர்.பி.ஐ., உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.வங்கிகளுக்கு எச்சரிக்கை
வாடிக்கையாளருக்கு முழுமையான தகவல் தராமல், முதலீட்டு திட்டங்களை வங்கிகள் விற்பனை செய்தால், ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுக்கும். விற்பனை இலக்கை எட்டுவதற்கான அழுத்தம் காரணமாக, இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவதாக எழும் புகார்களை, ஆர்.பி.ஐ., கவனத்தில் கொள்ளும்.சஞ்சய் மல்ஹோத்ராகவர்னர், ரிசர்வ் வங்கிவீட்டு கடன் எவ்வளவு குறையும்?
ரெப்போ விகிதம் கால் சதவீதம் குறைக்கப்பட்டதால், வங்கிகள் அதன் பலனை கடன்தாரர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கலாம். அதன்படி, வீட்டுக் கடனுக்கு கால் சதவீதம் வட்டி குறைந்தால் எவ்வளவு மிச்சமாகும் என பார்க்கலாம். வட்டி 9 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதமாக குறைந்தால், 30 ஆண்டு கால கடனுக்கு வட்டி 4.40 லட்சம் ரூபாய் அல்லது 10 மாத தவணை குறையும் அதுவே 8.50 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக வட்டி குறைந்தால், 8.20 லட்சம் ரூபாய் அல்லது 18 மாத தவணை குறையும். பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர், ஆடை தயாரித்து கொடுப்பதற்கு வங்கி கடன்களையே அதிகம் நம்பியுள்ளனர். ஒவ்வொரு ஆர்டருக்கும் 'பேக்கிங் கிரெடிட்' கடன் பெறப்படுகிறது. புதிய இயந்திரம் உள்ளிட்ட முதலீடுகளுக்காக நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்கள் பெறப்படுகின்றன.சில கடன்களுக்கு நிலையான வட்டி விகிதம் உள்ளது. பெரும்பாலான கடன்களுக்கு, 'ரெப்போ ரேட்' அடிப்படையில் வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 9 சதவீதம் வரை வட்டி செலுத்த நேரிடுகிறது. கடந்த காலங்களில் பலமுறை எதிர்பார்த்தும், 'ரெப்போ ரேட்' குறையாமல் வட்டி அதிகமாகவே இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது 'ரெப்போ ரேட்' குறைந்துள்ளது. இதனால், நிகழ் நேர கடன்களுக்கான வட்டி குறையும். இதன் வாயிலாக ஆடை உற்பத்தி செலவு குறைந்து, போட்டித்திறன் அதிகரிக்கும். 'ரெப்போ ரேட்' மேலும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்துதரப்பினரும் பயன்பெறுவர்.திருப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் தனஞ்செயன் கூறுகையில், ''ரெப்போ ரேட் குறைய வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்போது அது குறைக்கப்பட்டதன் பயனை, உடனடியாக வங்கிகள் வாடிக்கையாளருக்கு வழங்க முன்வர வேண்டும்,'' என்றார்.