ஓய்வூதியம், மானியம் பெறுவோரின் வங்கி கணக்குகளை முடக்கக்கூடாது ரிசர்வ் வங்கி துணை கவர்னர் அறிவுறுத்தல்
மும்பை:ஓய்வூதியம், அரசு மானியங்கள் பெறப்படும் வங்கிக் கணக்கு களை, எக்காரணம் கொண்டும் முடக்கக் கூடாது என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக ஆர்.பி.ஐ., துணை கவர்னர் சுவாமிநாதன், தனியார் வங்கிகளின் இயக்குநர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது:வாடிக்கையாளரை அறியும் நடைமுறையான கே.ஒய்.சி.,யை பெற வேண்டியது அவசியம் தான். எனினும், அதில் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டியதும் அவசியம். கே.ஒய்.சி., புதுப்பிப்பதற்கு தாமதமாகிறது என்பதற்காக, அரசு மானியங்கள், ஓய்வூதியம், நலத்திட்ட தொகைகள் பெறப்படும் வங்கிக் கணக்குகளை முடக்கக் கூடாது.மூத்த குடிமக்கள், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர், இதனால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் சேவைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தி வரும் ரிசர்வ் வங்கியின் இலக்குகளில், இது முக்கியமானது. தங்களது கணக்கில் வரும் மானியங்கள், ஓய்வூதியத்தை தடையின்றி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிப்பதை, வங்கிகள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.அதேநேரம், அவர்களை உரிய வழிகளில் தொடர்பு கொண்டு முகவரி, தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட கே.ஒய்.சி., தகவல்களை பெற்று, புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.