| ADDED : ஏப் 04, 2024 11:24 PM
புதுடில்லி:அண்மையில் மின்சார வாகனங்களுக்கான புதிய கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 'டெஸ்லா' நிறுவனம், இந்தியாவுக்கு வருவது குறித்து, அந்த நிறுவனம்தான் முடிவெடுக்க வேண்டும் என, தொழில்துறை செயலர் ராஜேஷ்குமார் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியா மின்சார வாகனங்களுக்கான புதிய கொள்கையை அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் முதலீடு செய்வது குறித்த தனது திட்டங்களை, டெஸ்லா தான் அறிவிக்க வேண்டும். முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் தற்போது டெஸ்லா தான் உள்ளது.மாநில அளவில் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க மத்திய அரசு உதவும். ஏற்கனவே வியட்நாமைச் சேர்ந்த 'வின்பாஸ்ட்' நிறுவனம், தமிழகத்தில் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளது. மேலும் சில நிறுவனங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.வரி சலுகைகளைப் பெற, நிறுவனங்கள் குறைந்தபட்சம் 4,150 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மேலும், மூன்று ஆண்டுகளுக்குள் உள்ளூர் ஆலையில் இருந்து மின் வாகனங்களை உற்பத்தி செய்ய துவங்க வேண்டும் என புதிய கொள்கையில் அரசு தெரிவித்துள்ளது. இக்கொள்கை மின் வாகனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். இதன் காரணமாக, 2030ம் ஆண்டுக்குள், நான்கு சக்கர மின் வாகனங்கள் பயன்பாடு குறைந்தபட்சம் 10 சதவீதம் அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.