| ADDED : மே 03, 2024 01:50 AM
அகமதாபாத்: குளிரூட்டும் கருவி தயாரிப்பில் பிரபலமான 'சிம்பொனி' நிறுவனத்தின், கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டின் ஒருங்கிணைந்த லாபம், 48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 16 கோடி ரூபாயை விட, 200 சதவீதம் அதிகமாகும்.இந்நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டின் மொத்த வருவாய், 332 கோடி ரூபாயாக இருந்தது.இதுதவிர, ஒட்டுமொத்தமாக, கடந்த நிதியாண்டுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நிறுவனத்தின் மொத்த வருவாய் 1,156 கோடி ரூபாயாகவும்; மொத்த லாபம் 148 கோடி ரூபாயாகவும் அதிகரித்து இருந்தது. இதைத்தொடர்ந்து, நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு 2 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு, ஈவுத்தொகையாக 8 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிருபேஷ் ஷா, “வழக்கத்திற்கு மேலாக வெப்பநிலை அதிகரித்ததால், கடந்த மார்ச் காலாண்டில், நிறுவனத்தின் குளிரூட்டும் சாதனங்களின் விற்பனை அதிகரித்தது. இது நிறுவனத்தின் லாபத்தையும், வருவாயையும் அதிகரிக்க உதவியுள்ளது.” என்று தெரிவித்தார்.