மேலும் செய்திகள்
குத்தகைக்கு வரும் திருச்சி உட்பட 11 ஏர்போர்ட்கள்
1 hour(s) ago
எண்கள்
1 hour(s) ago
மூலிகை கஷாயத்துக்கு தேநீர் என்ற பெயர் கூடாது
1 hour(s) ago
கடுகு சாகுபடி பரப்பளவு 4.30% உயர்வு
25-Dec-2025
கே.ஜி.ஜெயராமன், கோவைஉங்கள் முதலீட்டை பன்முகப்படுத்துவது தான் ஒரே வழி. மியூச்சுவல் பண்டு, பங்குகள், ஆர்.இ.ஐ.டி., தங்கம், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தால், பணவீக்கத்தையும் தாண்டி கொஞ்சம் கூடுதல் வருவாய் பார்க்கலாம். இப்படி செய்யும்போது, கொஞ்சம் ரிஸ்க் இருக்கத் தான் செய்யும். மத்திய அரசு, 'இன்பிளேஷன் இண்டக்ஸ்டு பாண்டு' எனப்படும், பணவீக்கத்தை உள்ளடக்கிய பத்திரங்களையும் வெளியிட்டு வருகிறது. இதில், பணவீக்கத்துக்கு ஏற்ப, உங்கள் முதலீடு உயரும்; வட்டியும் உயரும். இதில், 5,000த்தில் இருந்து, 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். உதாரணமாக, 5,000 முகமதிப்பு கொண்ட பத்திரத்தில் முதலீடு செய்து, அடுத்த ஆண்டில் பணவீக்கம் 5 சதவீதம் இருக்குமானால், இப்போது பத்திரத்தின் மதிப்பு 5,250 ரூபாய் ஆகிவிடும். வட்டியும் இந்த புதிய மதிப்புக்கு ஏற்ப கிடைக்கும். அரசின் பத்திரம் என்பதால், இதில் பாதுகாப்பு உண்டு. இது ஒரு வழிமுறை தானே தவிர, முதலீட்டை பன்முகப்படுத்துவது தான் சிறந்த வழி. இருசக்கர வாகன கடன் ஒன்று வாங்கி, அந்த கடனை அடைத் தும் விட்டேன். ஆனால், என் சிபில் ஸ்கோரில் இன்னும் மிச்சம் இருப்பதாக காட்டுவதோடு, மதிப்பும் குறைவாக காட்டுகிறது. என்ன செய்வது?
ஓ.பிரவீன்குமார், காஞ்சிபுரம்சிபில் இதற்கென்றே ஒரு வலைதளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சுட்டிக்கு https://www.cibil.com/consumer-dispute-resolution செல்லுங்கள். உங்கள் குறையை பதிவு செய்யுங்கள். ஒருவேளை இங்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், ஆர்.பி.ஐ.,யின் குறை தீர்வாணையர் வலைதளத்தில் https://cms.rbi.org.inஉங்கள் புகாரை பதிவு செய்யுங்கள்.சமீபத்திய விபரம் ஒன்று சுவாரசியமானது. கடந்த ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 ஓராண்டு காலகட்டத்தில், ஆர்.பி.ஐ., குறை தீர்வாணையருக்கு வந்த புகார்களில், இந்த கிரெடிட் பீரோ நிறுவனங்களின் மீது மட்டும் 1,039 புகார்கள் வந்துள்ளன. அவற்றில், சிபில் மீது மட்டும் 796 புகார்கள் உள்ளன என்று ஆர்.பி.ஐ.,யின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மதிப்பை அடிப்படையாக கொண்டு தான் பல வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் கடன் கொடுக்கும் முடிவையே எடுக்கின்றன. அவற்றின் மீதே இவ்வளவு புகார்கள் என்றால், இந்த கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்களின் செயல்பாடுகளை மேலும் வரையறை செய்ய வேண்டாமா? வெளிநாட்டு பங்குகளில் இங்கிருந்து கொண்டே முதலீடு செய்ய முடியுமா?
கோ.திருஞான சம்பந்தம், சென்னைமுடியும். இதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. உங்கள் பங்கு சந்தை புரோக்கர் அந்த வசதியை செய்து தரலாம். ஆனால், மியூச்சுவல் பண்டு வாயிலாக முதலீடு செய்வது தான் அதிக பாதுகாப்பான வழி என்பது என் கருத்து. அமெரிக்க பங்கு சந்தையையும், அதன் ஏற்ற இறக்கங்களையும், அதற்கான காரணங்களையும், இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு நம்மால் புரிந்துகொள்ள முடியாது. மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் பண்டு மேனேஜர்களாக இருப்பவர்கள், அதைப் பற்றி நன்கு தெரிந்தவர்களாக இருப்பர். அவர்கள் சர்வதேச பண்டு திட்டங்களை நிர்வகிக்கின்றனர். அத்தகைய பண்டு திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. ஆனால், இப்போதைக்கு அந்த வாய்ப்பு இல்லை. சர்வதேச பண்டுகளில் முதலீடு செய்வதற்கு, தற்போது செபி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏப்ரல் 1 முதல், புதிய முதலீடுகளை பெற வேண்டாம் என்றும் தடை விதித்துள்ளது. கொஞ்சம் பொறுங்கள். நிலைமை மாறும்போது, இந்த தடை விலகும். அப்போது முதலீடு செய்யலாம். ஏப்ரல் 1 முதல்,காப்பீடு பாலிசி களை, 'டிஜிட்டல்' முறையில் தா ன் வைத்துக்கொள்ள வேண்டு மாமே? எங்கே வைத்துக்கொள்ள வேண்டும்? கையில் பேப்பராக கொடுக்க மாட்டார்களா?
எஸ்.கோதண்டராமன், சென்னைவாடிக்கையாளர் கேட்டால், காகிதத்தில் அச்சடித்து ஒரு பிரதி கொடுக்க வேண்டும் என்று இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. நீங்கள் தெரிவித்தது போன்று, இன்று முதல் ஆயுள், மருத்துவ, பொது உள்ளிட்ட அனைத்து காப்பீடு பாலிசிகளும், டிஜிட்டல் முறையில் தான் வழங்கப்படும். இதை, 'இ - - இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்' என்ற 'மின் காப்பீடு கணக்கு' பெட்டகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி, டீமாட் கணக்கில் பங்குகளை வைத்துக் கொள்கிறோமோ; அது போன்று தான் இந்த 'இ - ஐ.ஏ.,' செயல்படும். நம் நாட்டில் 'கேம்ஸ், கார்வி, என்.டி.எம்.எல், சென்ட்ரல் இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரி ஆப் இந்தியா' என நான்கு காப்பீடு பெட்டகங்கள் உள்ளன. இந்த இ - ஐ.ஏ., பெட்டகத்தை உருவாக்குவதற்கு நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம். நீங்கள் காப்பீடு எடுக்கும் நிறுவனமே, இந்தப் பெட்டகத்தை இலவசமாக பெற்றுத் தரும். அதன் பிறகு, நீங்கள் எத்தனை விதமான பாலிசிகளை வாங்கினாலும், இந்த காப்பீடு மின் கணக்கிலேயே சேமித்து வைத்துக்கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் 'புளோட்டிங் ரேட்' பத்திரத்தில் முதலீடு செய்வது பற்றி் கூறவும். இந்த முதலீடு லாபகரமானது தானா?
பொ.செந்துார்குமரன், விருதுநகர்இந்த பத்திரம், அரசு வெளியிடும் பத்திரம் என்பதால், பாதுகாப்புக்கு குறைச்சல் இல்லை. தேசிய சேமிப்பு பத்திரங்களை விட, இந்த புளோட்டிங் ரேட் பத்திரத்துக்கு, 0.35 சதவீதம் கூடுதலாக வட்டி நிர்ணயிக்கப்படும். பொதுவாக வட்டி விகிதம் உயரும் போது, இந்தப் பத்திரத்தின் வட்டி விகிதமும் உயரும். குறையும் போது, வட்டி குறையும். வங்கி வைப்பு நிதியை விட, இந்தப் பத்திரம் கூடுதல் வருவாய் கொடுக்கும் என்பது தான் இதன் சிறப்பு. இனிமேல் நம் நாட்டில் வட்டி விகிதம் உயராது; குறையத் தான் போகிறது. இந்நிலையில், மாறுபடும் வட்டி விகிதத்தை அடிப்படையாக கொண்ட இந்தப் பத்திரம், எதிர்காலத்தில் எவ்வளவு வருவாயை ஈட்டித் தரும் என்று சொல்வதற்கில்லை. வட்டி விகிதங்கள் குறைந்த பின், யோசித்து முடிவு செய்யவும்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.com ph:98410 53881
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
25-Dec-2025