தமிழகத்தில் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் வேறு மாநிலத்திற்கு செலவழிக்கின்றன அமைச்சர் ராஜா குற்றச்சாட்டு
ஓசூர்:''மத்திய அரசின் சில நிறுவனங்கள், தமிழகத்தில் கிடைக்கும் வருவாயை கொண்டு சென்று, பல மாநிலங்களுக்கு கொடுப்பதை வேலையாக வைத்துள்ளது,'' என, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமான 'டிக்' சார்பில், தொழிற்கடன் வழங்கும் சிறப்பு முகாம் மற்றும் தொழில்முனைவோர் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. டிக் நிர்வாக இயக்குனர் சாய்குமார், தொழில் துறை செயலாளர் அருண்ராய், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தனர். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஓசூர், சேலம், கோவை, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 65 தொழில்முனைவோர்களுக்கு, 179.64 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா பேசியதாவது:மத்திய அரசின் சில நிறுவனங்கள், தமிழகத்தில் கிடைக்கும் வருவாயை கொண்டு சென்று, பல மாநிலங்களுக்கு கொடுப்பதை வேலையாக வைத்துள்ளன. அதை தமிழகத்தின் வளர்ச்சிக்கு தான் செலவிட வேண்டும் என, கோரிக்கை வைத்துஉள்ளோம். இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியை, இப்பகுதி மக்களுக்கே செலவிட வேண்டும் என, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தெரிவிக்கப்படும். ஓசூரில், பன்னாட்டு விமான நிலையத்திற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மெட்ரோ ரயிலையும் இணைத்தால், பெங்களூரு மற்றும் ஓசூர் இரட்டை நகரங்கள் போல் வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஓசூருக்கு சிறிய டைடல் பார்க் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.