டிக் கடனுக்கு வட்டி மானியம் மீண்டும் வழங்க கோரிக்கை
சென்னை:தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசின், 'டிக்' எனப்படும் தொழில் முதலீட்டு கழகம், பல்வேறு பிரிவுகளில் கடன் வழங்குகிறது. இந்த கடன்களுக்கு, அரசின் மானிய சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட வட்டி மானியத்தை மீண்டும் வழங்க, அரசுக்கு தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர். இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொதுச்செயலர் வாசுதேவன் கூறியதாவது:சிறு, குறுந்தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்யவும், டிக் நிறுவனத்தில் வாங்கப்படும் கடன்களுக்கு, 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்பட்டது. அதாவது, கடனை வாங்கியவர்கள் தவணைகளை சரியாக செலுத்துவதை ஊக்குவிக்க, செலுத்திய மொத்த வட்டியில், 6 சதவீதம், அந்தாண்டின் முடிவில் கடன் பெற்ற அசல் தொகையில் வரவு வைக்கப்பட்டது. இது, சிறு, குறுந்தொழில்களுக்கு மிகவும் பயன் அளித்தது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், வட்டி மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது, மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஊழியர்கள் சம்பளம், வங்கிகளில் அதிக வட்டி போன்றவை சிறு, குறுந்தொழில்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, டிக் நிறுவனத்தில் வழங்கப்படும் கடன்களுக்கு, 6 சதவீத வட்டி மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.