சோலார் பேனல்கள்
ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி வசதியை நிறுவி, 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும், 'பி.எம்., சூர்யகர் முப்த் பிஜ்லி யோஜனா' திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், சோலார் செல்கள், பேனல்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு தொடரும். அதேசமயம் உள்நாட்டு உற்பத்தியாளர்களை கருத்தில் கொண்டு, சோலார் கண்ணாடி, கண்ணாடி மற்றும் மெல்லிய தாமிர இணைப்பு ஆகியவற்றிற்கான சுங்க வரி விலக்கு நீக்கப்படுகிறது.
முக்கிய தாதுக்கள்
எரிசக்தி மாற்றத்திற்கு தேவைப்படும் முக்கிய தாதுக்ககளுக்கான சுங்க வரியை, மத்திய அரசு நீக்கியுள்ளது.அனல் மின்சக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, ராணுவம், தொலைத்தொடர்பு மற்றும் உயர் தொழில்நுட்ப மின்னணுவியல் துறைகளுக்கு தேவையான லித்தியம், தாமிரம் மற்றும் கோபால்ட் உள்ளிட்ட 25 முக்கிய கனிமங்களுக்கு, சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இம்முடிவு, இத்தகைய கனிமங்களின் செயலாக்கம் மற்றும் சுத்திகரிப்புக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் என்றும், இவற்றின் கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதர்போர்டு
தொலைத்தொடர்பு துறையில் மதர்போர்டுகளின் அடிப்படை சுங்கவரி, 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கனவே இவற்றுக்கு, 10 சதவீத வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 சதவீதம் வசூலிக்கப்பட உள்ளது. இப்பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், இவற்றின் இறக்குமதி வரியை உயர்த்துவதாக, நிதியமைச்சர் தெரிவித்தார்.