உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பசுமை திட்டங்களுக்காக 1,000 கோடி செலவிடப்படும்

பசுமை திட்டங்களுக்காக 1,000 கோடி செலவிடப்படும்

சென்னை:''பசுமை திட்டங்களுக்காக, தமிழக அரசிடம், 1,000 கோடி ரூபாய் பசுமை நிதி உள்ளது. மக்களுக்கு காலநிலை பொது அறிவு இருக்க வேண்டும்; இதை சமூகத்தின் ஓர் அங்கமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.சென்னை, தரமணியில், 'ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்கா, இந்திய எனர்ஜி ஸ்டோரேஜ் அலையன்ஸ்' உடன் இணைந்து, 'என்விஷன்' எனப்படும் எரிசக்தி மாநாடு நேற்று, நடந்தது.அதில், அமைச்சர் ராஜா பேசியதாவது:தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி உள்ளடக்கிய பசுமை மின்சாரம், 50 சதவீதம் கிடைக்கிறது. இதை, 75 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிக நீளமான கடற்கரையை கொண்ட தமிழக கடல் பகுதியில், 10,000 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கும் திறன் உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும், பவள பாறைகள் பாதிக்கப்படாமலும் கடலில் காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அமைய உள்ள பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில், நீரேற்று மின் திட்டங்கள் முக்கிய அங்கமாக இருக்கும். அந்த மின் நிலையத்தில், ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் அணைக்கு எடுத்து சென்று, தேவைக்கு ஏற்ப மின் உற்பத்திக்கு பயன்படுத்தலாம். மின் வாரியம், 15 இடங்களில் நீரேற்று மின் நிலையங்களை செயல்படுத்த உள்ளது. மக்களிடம், காலநிலை பொது அறிவு இருக்க வேண்டும். இதை, பள்ளி, கல்லுாரி வாயிலாக ஒவ்வொருவரின் மனதிலும் பதிய வைத்து, சமூகத்தின் ஓர் அங்கமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழக அரசிடம், 1,000 கோடி ரூபாய் பசுமை நிதி உள்ளது. இது, பசுமை திட்டங்களை உருவாக்க பயன்படுத்தப்படும். இதற்கு, ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்கா ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்கா தலைவர் மற்றும் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா பேசும்போது, 'புதைபடிமம் இல்லாத ஆற்றலை நோக்கி நாம் விரைவாக நகர வேண்டும். அதற்கு சிறந்த வழி, பசுமை மின்சாரமே. 'அதற்கு, தற்போது இருப்பதை விட பசுமை மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்' என்றார்.இந்நிகழ்ச்சியில், இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் அனில் காகோட்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

எரிசக்தி மாநாட்டுக்கு பின், ராஜா அளித்த பேட்டி:'அனைவருக்கும் அனைத்தும்' என்ற முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு பெரும் உந்துதலாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு அமையும். இந்தியாவிற்குள் முதலீடு செய்ய வரும் எந்த வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும், அவர்களின் முதல் தேர்வாக தமிழகம் உள்ளது. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் அனைத்து நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தஞ்சையில், விமான நிலையம் விரைவில் வரும்.ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால், சில நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பானை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை