உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நாமக்கல், சேலத்தில் 50 சதவிகிதம் விசைத்தறிகள் மூடல் ரூ.200 கோடி ஜவுளி தேக்கம்

நாமக்கல், சேலத்தில் 50 சதவிகிதம் விசைத்தறிகள் மூடல் ரூ.200 கோடி ஜவுளி தேக்கம்

நாமக்கல்:“நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உற்பத்தியான ஜவுளி ரகங்கள், விற்பனையின்றி 200 கோடி ரூபாய்க்கு தேக்கமடைந்துள்ளன,” என்று வெண்ணந்துார் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சங்கத்தின் செயலர் காசிபெருமாள் கூறியதாவது:நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை, விருதுநகர், தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் விசைத்தறி, நெசவு தொழில் பிரதானமாக உள்ளது. இந்த தொழிலை நம்பி, நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பெரும் சோதனைகளை சந்தித்து வருகிறது.தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, துண்டு, சேலை என பல ரகங்கள், அண்டை மாநிலங்கள், வடமாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்பப்பட்டு வந்தன. ஏற்றுமதியும் செய்யப்பட்டு வந்தன. இதனால், ஆண்டுதோறும் சீராக வர்த்தகம் நடந்து வந்தது.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். உற்பத்தி செய்த ஜவுளிகள் விற்பனையின்றி தேக்கமடைந்ததால், விசைத்தறியாளர்கள் கடன் சுமையில் சிக்கித்தவித்து வருகின்றனர்.குறிப்பாக, நாமக்கல், சேலம் மாவட்டங்களில், 50,000க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களாக விற்பனையின்றி, 200 கோடி ரூபாய் அளவிற்கு ஜவுளி ரகங்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால், 50 சதவீதம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கவும்; வேலையிழப்பை தடுக்கவும் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !