ஹைதராபாத்: அதானி குழுமம், தெலுங்கானா அரசுடன், 12,400 கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களுக்கான நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.இந்த ஒப்பந்தங்களின்படி, 'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனம், 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், 100 மெகாவாட் திறன் கொண்ட தரவு மையத்தை அமைக்க உள்ளது. இது நேரடியாகவும், மறைமுகமாகவும் 600 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், 'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனம், 5,000 கோடி ரூபாயும், 'அம்புஜா சிமென்ட்ஸ்' நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், சிமென்ட் ஆலை அமைப்பதற்காக, 1,400 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது. இதனால் 4,000 பேர் வேலைவாய்ப்புகளை பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.டிரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளின் தயாரிப்பு, வடிவமைப்பு, ஆராய்ச்சி உள்ளிட்டவற்றுக்காக, 'அதானி டிபென்ஸ்' நிறுவனம், அடுத்த 10 ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன் வாயிலாக 1,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.