உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துருக்கி நிறுவன ஒப்பந்தம் முறித்துக்கொண்டது அதானி

துருக்கி நிறுவன ஒப்பந்தம் முறித்துக்கொண்டது அதானி

மும்பை:மும்பை, ஆமதாபாத் விமான நிலையங்களில், தரை வழி கையாளுதல் நடவடிக்கைகளுக்காக துருக்கியைச் சேர்ந்த 'செலிபி' நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை உடனடியாக முறித்துக் கொள்வதாக அதானி ஏர்போர்ட் அறிவித்து உள்ளது. பஹல்காமில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, இந்தியா ஆப்பரேஷன் சிந்துாரை நடத்தியது. இந்த விவகாரத்தில், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் பாகிஸ்தானுக்கு, துருக்கி வெளிப்படையான ஆதரவை தெரிவித்தது. இதனால், துருக்கியில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள் உள்ளிட்டவற்றை புறக்கணிக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். துருக்கிக்கு முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணங்களையும் ஏராளமானோர் ரத்து செய்து வருகின்றனர்.இந்நிலையில், துருக்கியை சேர்ந்த செலிபி நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி சான்றிதழை மத்திய அரசு திரும்ப பெற்றது.மும்பை, ஆமதாபாத், மங்களூர், குவாஹத்தி, ஜெய்ப்பூர், லக்னோ, திருவனந்தபுரம் விமான நிலையங்களை நிர்வகித்து வரும் அதானி ஏர்போர்ட், மும்பை, ஆமதாபாத்தில் செலிபி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

டிராகன்பாஸ் அனுமதி ரத்து

சீனாவைச் சேர்ந்த 'டிராகன்பாஸ்' உறுப்பினர்களுக்கான ஓய்வறை அனுமதியை அதானி ஏர்போர்ட் ரத்து செய்துள்ளது. இது குறித்து, அதானி ஏர்போர்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், 'எங்கள் நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களில் உள்ள ஓய்வறையில், டிராகன்பாஸ் வாடிக்கையாளர்கள் இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த மாற்றம், விமான நிலைய ஓய்வறை, விமான பயணியருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது' என தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை