மேம்பட்ட உற்பத்தி திறன்மிகு மையம் இயக்கும் பணியில் அக்னிகுல் நியமனம்
சென்னை:விமான இயந்திர பாகங்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு உதவும், மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தை இயக்கும் பணிக்கு, 'அக்னிகுல் காஸ்மோஸ்' நிறுவனத்தை, 'டிட்கோ' நியமித்துள்ளது. தமிழகத்தில், உற்பத்தி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான தேவையை கருதி, தமிழக மேம்பட்ட உற்பத்திக்கான மையம், தமிழக நுண்திறன் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம், மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் ஆகிய மூன்று மையங்களை, உலகளவில் செயல்படும் பெரிய நிறுவனங்களுடன் இணைந்து, சென்னை தரமணியில் தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம் அமைத்துள்ளது. அதன்படி, மேற்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம், ஜி.இ., ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து, 140 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இது, விமான இயந்திர பாகங்கள், மருத்துவ சாதன பாகங்கள், வாகன துல்லிய பொறியியல் துறைகளுக்கான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த மையத்தை முதல்வர் ஸ்டாலின், 2022 நவம்பரில் துவக்கி வைத்தார். மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தை, ஜி.இ., நிறுவனம் இயக்கி வந்தது. அதன் ஒப்பந்தம் காலம் முடிவடைந்து விட்டது. இனி, அந்த மையத்தை இயக்கும் பணிக்கு, 'அக்னிகுல், நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளது. சென்னையை சேர்ந்த, விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான அக்னிகுல், 'அக்னிபான்' என்ற சோதனை ராக்கெட்டை, 2024ல் வெற்றிகரமாக ஏவியது. மேற்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம், ஜி.இ., ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து, 140 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு உள்ளது.