உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உணவு பதப்படுத்துதல் தொழிலில் ஏ.ஐ., தொழில்நுட்பம் தேவை

உணவு பதப்படுத்துதல் தொழிலில் ஏ.ஐ., தொழில்நுட்பம் தேவை

தஞ்சாவூர்:தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனமான நிப்டெம்மில், நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சிராக் பாஸ்வான் பேசியதாவது:உலகம் முழுதும் சாப்பாட்டு மேஜையில் குறைந்தபட்சம் ஒரு உணவாவது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை, ஒரு இயக்கமாக நாம் எடுத்துச் செல்ல வேண்டும். உணவு உற்பத்தியில் உலகளவில் நம் நாடு முன்னோடியாக இருந்தாலும், நாம் விளைவிக்கும் பொருட்களில் ஒரு பகுதி மட்டுமே பதப்படுத்தப்படுகிறது. உணவு பதப்படுத்துதலில் உற்பத்தியை பெருக்குவது மட்டுமல்லாமல், விரயமாவதை குறைத்தல், ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் மலிவு விலையை உறுதி செய்தல் ஆகிய பலன்களும் கிடைக்கின்றன.அதிகரித்து வரும் தேவைகளை உணர்ந்து, மத்திய அரசு, உணவு பதப்படுத்துதல் துறையை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இத்துறையில், திறமையான வல்லுநர்கள், மேம்பட்ட ஆய்வுகளுக்காக கூடுதலாக ஒரு நிப்டெம் நிறுவனம் அமைக்க, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், உற்பத்தி தொடர்பான மானிய திட்டம், பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா போன்ற திட்டங்களால் வலுவான அடித்தளத்தை மத்திய அரசு அமைத்து வருகிறது. உணவு தொழில்நுட்பம், பதப்படுத்துதலில் மாணவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை செயல்படுத்தி நடை முறைப்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல், தானியங்கி, உணவு பேக்கேஜிங் முறை போன்றவற்றின் வாயிலாக, உணவு பதப்படுத்துதலை உயர்ந்த நிலைக்குக் எடுத்துச் சென்று, இந்தியாவை உலகளவில் முன்னோடியாக கொண்டு வர முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை