உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கணக்கு தாக்கல் செய்யாவிடில் கைது? வருமான வரி சட்டத்தில் பரிசீலனை

கணக்கு தாக்கல் செய்யாவிடில் கைது? வருமான வரி சட்டத்தில் பரிசீலனை

புதுடில்லி:வருமான வரி விலக்கு வரம்புக்கு மேல் வருமான ஈட்டியும் கணக்கு தாக்கல் செய்யத் தவறுவோர், வருமான வரிச் சட்டத்தின் மறுஆய்வில் அமல்படுத்தப்பட உள்ள புதிய விதிகளின்படி, கைது செய்யப்படுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த ஜூலையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரிச் சட்ட மறுஆய்வு குறித்து அறிவித்தார். பழைய சட்டப் பிரிவுகளில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.வருமான வரி விதிகளை எளிதாக புரிந்து கொள்ளும்படியும், வழக்குகளை குறைக்கும் நோக்கிலும் புதிய மாற்றங்கள் செய்யப்பட, வரி செலுத்துவோரின் கருத்துகள் வரவேற்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.அதன்படி, மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில் உட்புற குழு அமைக்கப்பட்டு, வருமான வரிச் சட்ட ஷரத்துகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இப்போதுள்ள சட்டத்தின்கீழ், வருமான வரி செலுத்த வேண்டிய வரம்புக்குள் வருவாய் ஈட்டியும், தெரிந்தே கணக்கு தாக்கல் செய்யாதவர் மீது வழக்கு தொடரப்படும். குறிப்பாக, 25,000 ரூபாய்க்கு மேல் வரி நிலுவை இருந்து, கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத்துடன், மூன்று மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், இந்த சட்டப்பிரிவில், குறைந்த அளவிலான வரி பாக்கி வைத்திருப்போர், மூத்த குடிமக்கள், பெண்கள், வருமான வரி விலக்கு வரம்புக்கு கீழ் வருவாய் ஈட்டுபவர்கள், கணக்கு தாக்கல் செய்யாததற்கு சரியான காரணம் உள்ளவர்கள் மீது வழக்கு தொடர வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டு, சட்டப்பிரிவில் மாற்றம் செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை