உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவுக்கு ரூ.1,112 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி கடன்

இந்தியாவுக்கு ரூ.1,112 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி கடன்

புதுடில்லி:உத்தராகண்ட் மாநிலத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக, மத்திய அரசு, ஆசிய வளர்ச்சி வங்கியுடன் 1,112 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தின் டெஹ்ரி ஏரி பகுதியில் நிலையான சுற்றுலா நடைமுறைகளை உருவாக்குவதன் வாயிலாக, கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். டெஹ்ரி கார்வால் மாவட்டம், உத்தராகண்டின் மிகவும் வறட்சியான மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாகும். சுற்றுலா திட்டமிடல், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றின் வாயிலாக, இப்பகுதியில் வசிக்கும் 87,000 க்கும் மேற்பட்ட மக்களும், ஆண்டுதோறும் இங்கு வரும் 27 லட்சம் சுற்றுலா பயணிகளும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம், டெஹ்ரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கி, வருமானத்தை அதிகரிக்கவும், காலநிலை மாற்றங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. “உத்தராகண்ட் மாநிலத்தை ஆண்டு முழுதும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக உருவாக்கும் அரசின் முயற்சிக்கு, இந்த கடன், உதவியாக இருக்கும். இதைக்கொண்டு பெண்கள், இளைஞர்கள் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்பு வாயிலாக, சுற்றுலா சேவைகள் மேம்படுத்தப்படும்”, என நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை இணை செயலர் ஜூஹி முகர்ஜி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி