உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வங்கதேசத்துக்கான ஆர்டர்கள் திருப்பூருக்கு திரும்ப வாய்ப்பு

வங்கதேசத்துக்கான ஆர்டர்கள் திருப்பூருக்கு திரும்ப வாய்ப்பு

திருப்பூர்:சாதகமான சூழல் நிலவுவதால், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய வர்த்தகர்கள், இந்தியாவுடன் வர்த்தக விசாரணை நடத்துவது அதிகரித்து உள்ளது. வங்கதேசத்துக்கு சென்று கொண்டிருந்த ஆடை ஆர்டர்கள் திருப்பூருக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். உலக அளவிலான ஜவுளி ஏற்றுமதியில் சீனா முதலிடத்தில் இருந்தாலும், இந்திய ஏற்றுமதியாளருக்கு கடும் போட்டியாக இருப்பது வங்கதேசம், வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகள். எவ்வித மூலப்பொருள் உற்பத்தியும் இல்லாத வங்கதேசத்துக்கு, வளர்ந்த நாடுகள் இறக்குமதி வரி சலுகை அளிக்கின்றன. வரிச்சலுகையுடன் செயல்படும் வங்கதேசம், இந்தியாவுக்கு கடும் போட்டியாக மாறியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் நாடுகள், 'பூஜ்ஜிய' வரி என்ற சலுகையை அந்நாட்டுக்கு வழங்கி வருகின்றன. கடந்த நிதியாண்டில், வங்கதேசத்தின் ஆடை ஏற்றுமதி 3.98 லட்சம் கோடி ரூபாய்; இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியோ 1.40 லட்சம் கோடி ரூபாய் தான். நீண்டகால முயற்சியாக, இந்தியா - பிரிட்டன் இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் - ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் கூறுகையில், ''வழக்கத்தைவிட பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்களும், வர்த்தக ஏஜன்சிகளும், அதிக அளவு வர்த்தக விசாரணை நடத்தி வருகின்றனர். ''பிரிட்டனுடனான ஒப்பந்தம் இரண்டு மாதங்களில் அமலுக்கு வரும் என்பதால், புதிய வர்த்தக வாய்ப்புகள் குவியும். வங்கதேசத்துக்கான ஐரோப்பிய ஏற்றுமதி ஆர்டர்கள், திருப்பூருக்கு மாற வாய்ப்புள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை