புகாருக்கு வங்கி தீர்வு தரவில்லையா? வாடிக்கையாளருக்கு தினசரி ரூ.100 தரணும் ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு
மும்பை:கடன் குறித்த தகவல்களை, புதுப்பிக்காத கடன் தகவல் நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் புகார் அளித்த 30 நாட்களுக்குள் தீர்வு காணாவிடில், வாடிக்கையாளருக்கு நாளொன்றுக்கு 100 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.நாட்டில் தற்போது ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட டிரான்ஸ்யூனியன் சிபில், சி.ஆர்.ஐ.எப். ஹை மார்க், இக்யுபேக்ஸ், எக்ஸ்பிரியன் ஆகிய நான்கு கடன் தகவல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, சில நேரங்களில் தவறான தகவல்கள் காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது உண்டு. இந்நிலையில், நேற்று ஆர்.பி.ஐ., வெளியிட்ட கடன் தகவல் அறிக்கை தொடர்பான வழிகாட்டு உத்தரவில் தெரிவித்துஉள்ளதாவது: வாடிக்கையாளரின் கடன் குறித்த தகவல்களை, புதுப்பிக்காத கடன் தகவல் நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர் புகார் அளித்த 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். அவ்வாறு தீர்வு காணாவிடில், வாடிக்கையாளருக்கு நாளொன்றுக்கு 100 ரூபாய் வீதம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், கடன் தகவல் நிறுவனங்கள், வங்கிகள் அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளரின் கடன் தகவல் அறிக்கையை கேட்கும் போது, வாடிக்கையாளரின் மின்னஞ்சல் அல்லது எஸ்.எம்.எஸ்., வாயிலாக தகவல் தெரிவிப்பது அவசியம். வங்கிகள் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, 21 நாட்களுக்குள் கடன் தகவல் நிறுவனங்களுக்கு, கடன் தகவல்களை அப்டேட் செய்யவில்லை எனில், புகார்தாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.திருத்தங்கள் தொடர்பான வாடிக்கையாளர்களின் புகார்கள் ஒருவேளை நிராகரிக்கப்படும் பட்சத்தில், அதற்கான காரணத்தை கடன் தகவல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.