விண்ணப்பித்த 7 நாளில் ஜி.எஸ்.டி., பதிவு அதிகாரிகளுக்கு வாரியம் கிடுக்கிப்பிடி
புதுடில்லி:ஜி.எஸ்.டி., பதிவு செய்வதில் அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளுக்கான, திருத்தப்பட்ட விதிமுறைகளை, மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியம் வெளியிட்டுள்ளது. ஜி.எஸ்.டி., பதிவு செய்வதில் அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களையும் விளக்கங்களையும் கேட்டு துன்புறுத்துவதாக, அண்மைக்காலமாக வணிகர்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன. பதிவு விண்ணப்பத்தில் இடம்பெறும் சிறு தவறுகளுக்கும்கூட நோட்டீஸ் அனுப்புவதாகவும்; கூடுதல் ஆவணங்களை கேட்டுக்கொண்டே இருப்பதாகவும், சி.பி.ஐ.சி., அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, ஜி.எஸ்.டி., பதிவில் அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய திருத்தப்பட்ட விதிமுறைகளை வாரியம் வெளியிட்டுள்ளது. ஜி.எஸ்.டி., பதிவு விண்ணப்பம் தொடர்பாக அதிகாரிகள் கேட்கும் பல்வேறு விளக்கங்கள், தவிர்க்கக்கூடியவையாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. உள்ளீட்டு வரி வரவு பெற, முறைகேடாக நிறுவனங்கள் பதிவைத் தடுக்க வேண்டிய அதே நேரத்தில், உண்மையான நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., பதிவு செய்யும்போது, துன்புறுத்தப்படக் கூடாது என கூறப்பட்டுள்ளது.விண்ணப்பத்தில் இடம்பெற வேண்டியவை குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய விதிமுறைகள்:1சொந்த கட்டடமாக இருந்தால், உரிமையாளரின் பெயரில் சொத்து வரி அல்லது உள்ளாட்சி அனுமதி நகல், மின்கட்டண ரசீது தேவை. இவற்றின் அசலை கேட்க வேண்டாம்2 வாடகை கட்டடம் என்றால், வாடகை ஒப்பந்தம்/குத்தகை ஒப்பந்த நகல் வேண்டும். சொத்து வரி ரசீது, உள்ளாட்சி அனமதி நகல், மின்கட்டண ரசீது தேவை. கட்டட உரிமையாளரின் பான் கார்டு, ஆதார், புகைப்படம் ஆகியவற்றை கேட்க வேண்டாம்3 வாடகை ஒப்பந்தம்/குத்தகை ஒப்பந்தம் பதிவு செய்யப்படாவிட்டால், கட்டட உரிமையாளரின் ஏதாவது ஓர் அடையாள ஆவணம் இணைக்கப்பட வேண்டும்4 மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவை, வாடகைதாரரான விண்ணப்பதாரர் பெயரில் இருந்தால், வாடகை ஒப்பந்தம்/குத்தகை ஒப்பந்த ஆவணம் போதுமானது. அடையாள ஆவணம் கேட்க வேண்டாம்5 கட்டடத்தின் உரிமை, உரிமையாளரின் மனைவி/கணவர் அல்லது உறவினரின் பெயருடன் இருந்தால், வெள்ளைத்தாளில் அவரது ஒப்புதல் கடிதம் மற்றும் கடிதம் அளிப்பவரின் அடையாள ஆவணம் இணைக்கப்பட வேண்டும். குடிநீர் வரி ரசீது, மின்கட்டண இணைப்பில் அவரது பெயர் இருந்தால், அந்த ஆவணங்களும் ஏற்கப்படலாம்.
விளக்கங்கள் தவிர்க்கக்கூடியவையாக உள்ளதாக, வாரியம் தெரிவித்துள்ளது
காலக்கெடு
ஜி.எஸ்.டி., பதிவுக்கான விண்ணப்பத்தில் சந்தேகத்துக்குரிய காரணிகள் இல்லாமல் முழுமையாக இருந்தால், ஏழு வேலை நாட்களில் பதிவு செய்யப்பட வேண்டும். விண்ணப்ப தகவல்களில் சந்தேகம் இருந்தால், ஆதார் சரிபார்ப்பு அவசியம். அதன்பிறகும் அபாய சூழல் இருந்தால், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கட்டடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இத்தகைய விண்ணப்பத்துக்கு 30 நாட்களுக்குள் பதிவு வழங்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு gst-gov.inஎன்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.