வர்த்தக துளிகள்:ரூ.115 கோடி திரட்டிய சென்னை நிறுவனம்
வருமான வரி மேல் முறையீடு தொகை உயர்த்தி அறிவிப்பு
புதுடில்லி:வருமான வரி கேட்பு பிரச்னைகளில், தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் நேரடி வரிகள் வாரியம் மேல்முறையீடு செய்வதற்கான குறைந்தபட்ச தொகை வரம்பை, வருமான வரித் துறை உயர்த்தியுள்ளது. தீர்ப்பாயம் செல்ல 50 லட்சம் ரூபாயாக இருந்த குறைந்தபட்ச தொகை, 60 லட்சம் ரூபாயாகிறது. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு, ஒரு கோடி ரூபாயாக இருந்த வரம்பு, 2 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான தொகை 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டி.டி.எஸ்., டி.சி.எஸ்., உட்பட, அனைத்து வருமான வரி தாவாக்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என, வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
ரூ.115 கோடி திரட்டிய சென்னை நிறுவனம்
சென்னை:சென்னையைச் சேர்ந்த நிதி தொழில்நுட்ப நிறுவனமான 'கலைடோபின்', 115 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. டென்மார்க் நிறுவனமான 'ரபோ பார்ட்னர்ஷிப்' நிறுவனம், கலைடோபின் நிறுவனத்தில் 92 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து மீதி தொகை திரட்டப்பட்டுள்ளது. கடந்த, 2022ஆம் ஆண்டில், 'பில் அண்டு மெலிண்டா பவுண்டேஷன்' உட்பட சில அறக்கட்டளைகள், தனியார் நிறுவனங்கள், கலைடோபின் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 193 கோடி ரூபாயை முதலீடு செய்தன. அவற்றையும் சேர்த்து, இந்நிறுவனம் கிட்டத்தட்ட 310 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.