ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுடன் வாங்குவோர் -- விற்போர் சந்திப்பு
சென்னை, மே 23- ''தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை உலகம் முழுதும் கொண்டு செல்வதற்கு, பல நாடுகளுடன் இணைந்து, வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்,'' என, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அதுல் ஆனந்த் தெரிவித்தார்.எஸ்.ஐ.சி.சி.ஐ., எனப்படும் தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையுடன் இணைந்து தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், இந்திய - ஜெர்மனி சிறு, குறு, நடுத்தர தொழில் துறை கருத்தரங்கை சென்னையில் நேற்று நடத்தியது. இதில், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயலர் அதுல் ஆனந்த் பேசியதாவது:ஜெர்மனி மற்றும் தமிழக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை இணைக்கும் பாலமாக இந்த கருத்தரங்கு உள்ளது. தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 33 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றின் தயாரிப்புகளை உலகம் முழுதும் எடுத்து செல்வதற்கு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.