சரக்கு கையாளல்: கொச்சி துறைமுகம் ஒப்பந்தம்
கொச்சி: கொச்சி துறைமுகத்தில் மேம்பட்ட சரக்கு கையாளும் வசதியை அமைப்பது தொடர்பாக, துறைமுக ஆணையத்துடன், சரக்கு கையாளும் நிறுவனமான டி.பி.,வேர்ல்டு ஐ.சி.டி.டி., புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வாயிலாக, இரு நிறுவனங்கள் ஒன்றிணைந்து, கொச்சி துறைமுகத்தில், எதிர்காலத்தில் வரவிருக்கும் மிகப்பெரிய கப்பல்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக, அரசின் ஆதரவுடன் கடல்சார் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த உள்ளன. இது குறித்து டி.பி.,வேர்ல்டு இந்திய பிரிவு தலைமை செயல் அதிகாரி ரிஸ்வான் சோமர் கூறுகையில், “உலகளாவிய வர்த்தகத்தில் தலைமையேற்கும் இந்தியாவின் இலக்கை எட்டுவதற்காக, கேரளாவின் கடல்சார் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ஆதரவளிக்க உள்ளோம். இந்தியாவின் வர்த்தக மற்றும் வினியோக தொடர் ஒருங்கிணைப்பில், கொச்சி துறைமுகம் முக்கிய கருவியாக விளங்குகிறது” என்றார்