சியட், ஹிந்துஸ்தான் யுனிலீவருக்கு குளோபல் லைட்ஹவுஸ் அங்கீகாரம்
புதுடில்லி; புதுமை கண்டுபிடிப்புகள் வாயிலாக, உற்பத்தியை நவீனமயமாக்கியதற்கான, உலக பொருளாதார அமைப்பின் 'குளோபல் லைட்ஹவுஸ் நெட்வொர்க்'கில் சியட் மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனங்கள் இணைந்துள்ளன.'வேர்ல்டு எகனாமிக் போரம்' எனும் உலக பொருளாதார அமைப்பு, புதுமைப் படைப்புகள் வாயிலாக உற்பத்தியில் மாற்றங்களைச் செய்யும் நிறுவனங்களுக்கான குளோபல் லைட்ஹவுஸ் நெட்வொர்க் பட்டியலை வெளியிடுகிறது. தற்போது அது, 17 புதிய நிறுவனங்களை, உலக அளவில் இந்த நெட்வொர்க்கில் சேர்த்துள்ளது.இந்தியாவைச் சேர்ந்த, டயர் நிறுவனமான சியட் மற்றும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான எச்.யு.எல்., ஆகியவை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில், உலகம் முழுவதும் இருந்து 189 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சியட் டயர் தொழிற்சாலை, சர்வதேச விரிவாக்கத்துக்கு தேவையான கிடங்குகள், புதிய அறிமுகங்கள், உற்பத்தி இரட்டிப்பு ஆகியவற்றை 30 மின்னணு தீர்வுகள் வாயிலாக நிறைவேற்றியதாக, உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், தொழிலாளர்களின் உற்பத்தி 25 சதவீதம் அதிகரித்ததுடன்; காற்று மாசு 47 சதவீதம் குறைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.ஹிந்துஸ்தான் யுனிலீவரின் தின்சுகியா தொழிற்சாலை, பின்தங்கிய பகுதியில் அமைந்துள்ள போதிலும், குறைந்த ஆதாரங்களைக் கொண்டு 50 மின்னணு பயன்பாடுகளை செயல்படுத்தி, வினியோக தொடரை விரைவுபடுத்தியதாகவும், உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.