புதுடில்லி: இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை, மத்திய அரசு, கடந்தாண்டு மார்ச் 15ம் தேதி அறிவித்தது. இந்நிலையில், இத்திட்டத்துக்கான விரிவான வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பு மையங்கள் அமைக்க குறைந்தபட்சம் 4,150 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு 8,000 கார்கள் வரை, 15 சதவீதம் என்ற குறைவான வரி விகிதத்தில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.ஐந்து ஆண்டுகளுக்கு இந்த சலுகை வழங்கப்படும். தற்போது இறக்குமதி செய்யப்படும் மின்சார கார்களுக்கு 70 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.அடுத்த இரண்டு வாரத்துக்குள் விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கும் என்றும்; விண்ணப்பிப்பதற்கு 4 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், இந்த தொகை திருப்பி வழங்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக 6,484 கோடி ரூபாய் வரை வரிச் சலுகை வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, புதிய தயாரிப்பு ஆலை, இயந்திரங்கள், உபகரணங்கள், பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகளுக்கு, திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள்
குறைந்தபட்சம் 4,150 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் ஒப்புதல் பெற்ற மூன்று ஆண்டுகளுக்குள் தயாரிப்பு பணிகளை துவங்க வேண்டும் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் குறைந்தபட்ச உள்நாட்டு மதிப்பு கூட்டல் 25 சதவீதமாகவும்; ஐந்து ஆண்டுகளுக்குள் 50 சதவீதமாகவும் இருக்க வேண்டும் இவை அனைத்துக்கும் வங்கி உத்தரவாதம் பெற வேண்டும் விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் ஆண்டு வாகன தயாரிப்பு வருவாய், குறைந்தபட்சம் 10,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் நிலையான சொத்துகளில் முதலீடு குறைந்தபட்சம் 3,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும்
சுங்க கட்டண சலுகைகள்
குறைந்தபட்சம் 35,000 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட மின்சார கார்களை, ஆண்டுக்கு 8,000 கார்கள் என்ற விகிதத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு 15 சதவீதம் என்ற குறைவான வரி விகிதத்தில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் அதிகபட்சமாக 6,484 கோடி ரூபாய் வரை வரிச்சலுகை வழங்கப்படும்
டெஸ்லா ஆர்வம் காட்டவில்லை
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் மின்சார கார்கள் தயாரிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும், ஷோரூம்கள் அமைப்பதிலேயே முனைப்புக் காட்டி வருவதாகவும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். எனினும், மெர்சிடிஸ் பென்ஸ், போக்ஸ்வேகன் -ஸ்கோடா, ஹூண்டாய், கியா ஆகிய நிறுவனங்கள் நம் நாட்டில் மின்சார கார் தயாரிக்க ஆர்வம் காட்டியுள்ளதாகவும், இதுதொடர்பான விவாதங்களில் கலந்துகொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.