ரூ.100 கோடி முதலீடு திரட்டிய சென்னை ட்ரோன் ஸ்டார்ட் அப்
சென்னை:சென்னையை சேர்ந்த 'கருடா ஏரோஸ்பேஸ்' என்ற ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனம், நிதி திரட்டல் இரண்டாம் சுற்றில், 100 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளது. புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் இந்நிறுவனம், இதுவரை இரண்டு சுற்றுகளில், 160 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றுள்ளது. தற்போது, இந்நிறுவனத்தின் மதிப்பு, 2,134 கோடி ரூபாயாக உள்ளது.இந்த முதலீட்டை பயன்படுத்தி, உற்பத்தி ஆலையை விரிவுபடுத்துவது, நவீன ராணுவ ட்ரோன் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சோதனை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ட்ரோன் உதிரி பாகங்கள் மற்றும் இதர அமைப்புகளை உற்பத்தி செய்ய, 35,000 சதுர அடி பரப்பளவில், புதிய ஆலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 24,000 சதுர அடி பரப்பளவில், உற்பத்தி ஆலை செயல்பாட்டில் உள்ளது.இந்நிறுவனம் லாபகரமாக இயங்கி வருவதாகவும், கடந்த நிதியாண்டில், 120 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளதாகவும் இந்நிறுவன நிறுவனர் அக்னீஷ்வர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.அரசு, விவசாயம் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், ராணுவ தேவைகள் உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் சேவைகளை வழங்குகிறது இந்நிறுவனம்.