பெட்ரோலில் எத்தனால் கலப்பு 27 சதவீதமாக உயர்த்த பரிசீலனை
புதுடில்லி:பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை எட்டியுள்ள நிலையில், இதை 27 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, எரிபொருள் உற்பத்தியில் சுயசார்பு அடையவும், நம் நாட்டு விவசாயிகளின் வருவாயை பெருக்கவும், பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நடப்பு 2025ம் ஆண்டுக்குள், 20 சதவீத எத்தனால் கலப்பை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அது ஏறக்குறைய நிறைவேறியுள்ளது. இதைத் தொடர்ந்து பெட்ரோலில் எத்தனால் கலப்பை 27 சதவீதமாக அதிகரிக்க அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:பெட்ரோலில் எத்தனால் கலப்பை 27 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பாக, விரைவில் விதிமுறைகளை உருவாக்க பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய அமைப்பை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட விவாதங்கள் அடுத்த வாரம் நடைபெறவுள்ளன. டீசலில் 10 சதவீதம் ஐசோபியூட்டனால் கலப்பது தொடர்பாகவும் பி.ஐ.எஸ்., பரிந்துரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் அல்லாத பிற எண்ணெய் ஆதாரங்களில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.இதனால், எத்தனால் மற்றும் ஐசோபியூட்டனால் கலப்பு குறித்து விரிவான ஆலோசனைக்கு பின், விதிமுறைகள் வெளியிடப்படும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
இன்ஜினில் மாற்றம் வருமா?
எத்தனால் 27 சதவீதம் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் வகையில், வாகன இன்ஜின்களில் சில மாற்றங்கள் மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்த, ஏ.ஆர்.ஏ.ஐ., எனும் இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்தை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், 100 சதவீத எத்தனாலைக் கொண்டு இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்வதை அனுமதிக்கும் முயற்சியாக, இதுதொடர்பான வரைவு விதிமுறைகளை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினரிடம் கருத்து கேட்டுள்ளது.