தங்கம் இறக்குமதி வரியை உயர்த்த கவுன்சில் எதிர்ப்பு
புதுடில்லி : 'மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தினால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்' என, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனை தொடர்ந்து, நாட்டின் தங்க இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், உள்நாட்டில் தேவை அதிகரித்து, தங்கம் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனிடையே, வரும் பிப்.,1ல் தாக்கல் செய்யப்பட உள்ள 2025--26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து, உலக தங்க கவுன்சிலின் மண்டல தலைமை செயல் அதிகாரி சச்சின் ஜெயின் தெரிவித்துள்ளதாவது:கடந்த பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், சட்டவிரோத இறக்குமதி குறைந்ததுடன், வலுவான தங்க சந்தையும் உருவாகி உள்ளது. இந்நிலையில், வரியை உயர்த்தினால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். குறிப்பாக, தங்கக் கடத்தல் அதிகரிப்பதோடு, உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை உயர வழி வகுப்பதுடன், தங்க நகை சார்ந்த தொழிலை பின்னோக்கி கொண்டு செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.