உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜப்பான், ஐரோப்பாவுடன் பேச்சு ஆர்டர் பெற விசைத்தறியாளர்கள் முயற்சி

ஜப்பான், ஐரோப்பாவுடன் பேச்சு ஆர்டர் பெற விசைத்தறியாளர்கள் முயற்சி

பல்லடம்,:அமெரிக்க சந்தைக்கு மாற்றாக, ஏற்றுமதி தொடர்பாக, ஐரோப்பா, ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சு நடந்து வருவதாக, விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது: நவீன விசைத்தறிகளில், அதிக நுால் எண்ணிக்கை பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்படும் திரைச்சீலைகள், மெத்தை விரிப்புகள் உள்ளிட்ட ரகங்களில் 70 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், தற்போது இவை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ரகங்களை உற்பத்தி செய்து வந்த, 40,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் நாடு முழுதும் பாதிக்கப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும், 20,000க்கும் அதிகமான விசைத்தறிகள் இதில் அடங்கும். ஸ்பின்னிங் மற்றும் ஆயத்த ஆடைக்கு இடைப்பட்ட தொழில் என்பதால், விசைத்தறி தொழிலில் திடீரென மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இதுதவிர, விசைத்தறிகளை திடீரென நிறுத்தினால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, தொழிலே அழிந்து விடும் என்பதால், நஷ்டம் ஏற்பட்டாலும், நாங்களே பொறுப்பேற்று, தொழிலை தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. அமெரிக்காவுக்கு மாற்று அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து, ஏற்கனவே இது குறித்து திட்டமிட துவங்கி விட்டோம். அவ்வகையில், அமெரிக்க சந்தைக்கு மாற்றாக, இலங்கை, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்த பேச்சு நடந்து வருகிறது. இது தவிர, பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். வங்கி கடன் தவணைகளை செலுத்த, எட்டு மாதம் மத்திய அரசு அவகாசம் தருவதுடன், கொரோனா காலத்தில் வழங்கியது போல், கடன் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள நவீன விசைத்தறிகளுக்கு வட்டி தள்ளுபடி வழங்குவது அவசியம். விசைத்தறிகளுக்கு, மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை