மும்பை:கடந்த ஆண்டு சுதந்திர தினத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் இதே நாளில், பங்குச் சந்தையை விட தங்கம், வெள்ளி முதலீடுகள், அதிக லாபத்தை அளித்துள்ளன.
எம்.சி.எக்ஸ்., கமாடிட்டி சந்தையில், கடந்த 2024 ஆக., 14ம் தேதி, 10 கிராம் எடை கொண்ட தங்கத்தின் விலை, 70,152 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பாண்டு இதே நாளில், 43 சதவீதம் அதிகரித்து, 1,00,389 ரூபாயாக இருந்தது. இதே போன்று, வெள்ளி விலை 41 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தையை பொறுத்தவரை, 2024, ஆக., 14ல், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, வெறும் 2 சதவீதம் உயர்ந்து, 80,597 புள்ளிகளாக இருந்தது. நிப்டி குறியீடு, முந்தைய ஆண்டு 24,144 புள்ளிகளில் இருந்து 2 சதவீதம் உயர்ந்து, 24,631 புள்ளிகளாக இருந்தது.
விபரம் 2024 2025 உயர்வு (சதவீதத்தில்) 10 கிராம் தங்கம் ரூ.70,152 ரூ.1,00,389 43 % 1 கிலோ வெள்ளி ரூ.81,160 ரூ.1,13,342 41% சென்செக்ஸ் 79,121 80,597 2% நிப்டி 24,143 24,631 2% (ஆக. 14 நிலவரப்படி)தங்கம், வெள்ளி உயர்வுக்கு காரணங்கள் மத்திய வங்கிகள் நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில், கிட்டத்தட்ட 415 டன் தங்கம் கொள்முதல் ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஈரான் போர், அமெரிக்காவின் வரிவிதிப்பு தொழில்துறை தேவையால் முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீட்டை அதிகரித்தனர். பங்கு சந்தையில் மீட்சி எப்போது? பங்குச் சந்தையில், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால், அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். எனினும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு முதலீடுகள் வாயிலாக கைகொடுப்பதால், மீண்டும் மெல்ல மீண்டு வருகிறது. அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு தொடர்பான பிரச்னைகள் முடிவுக்கு வரும் போது, சந்தை குறியீடுகள் உயர்வு பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் 0.50 சதவீதம் வட்டியை குறைப்பது, தங்கத்தின் மீதான முதலீட்டை மேலும் அதிகரிக்க செய்யும் என நிபுணர்கள் கணித்து உள்ளனர்.