சிறுதொழில் உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு அரசு அழைப்பு
சென்னை:உணவு பதப்படுத்துதல், ஜவுளி துறையில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பதற்கு, சென்னையில் வரும், 11ம் தேதி தமிழக அரசின், 'பேம் டி.என்' நிறுவனம், வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, வேளாண் பொருட்கள், உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, உலகம் முழுதும் தேவை காணப்படுகிறது. இருப்பினும், பல நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களை தொடர்பு கொள்வது எப்படி, ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறை உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை.இதற்கு உதவும் வகையில், வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து, 'வாங்குவோர், விற்போர்' சந்திப்பு நிகழ்ச்சியை, தமிழக அரசின், 'பேம் டி.என்' எனப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வசதியாக்கல் நிறுவனம் நடத்துகிறது. அதன்படி, இந்நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும், 11ம் தேதி நடத்தப்படுகிறது. அதில், ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், மலேஷியா, போலந்து, மொரீஷியஸ், தான்சானியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 22 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.