ஸ்டார்ட் அப்களுக்கு உதவ தொழில் வளர் காப்பகங்கள் துவக்குவோருக்கு அரசு நிதி உதவி
சென்னை:தமிழகத்தில் இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை நகரங்களில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் துவக்குவோருக்கு உதவும் வகையில், தொழில் வளர் காப்பகங்கள் அமைக்க, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தமிழக அரசின், 'ஸ்டார்ட் அப்' டி.என்., நிறுவனம் அழைப்பு விடுத்துள் ளது. தமிழகத்தில் உள்ள, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்ப கட்ட செலவுகளை சமாளிக்க நிதியுதவி, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் வழங்குகிறது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டும் அல்லாமல் நடுத்தர நகரங்கள், கிராமங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்குவதை அரசு ஊக்குவிக்கிறது. இதற்காக மாநிலம் முழுதும் இரண்டாம், மூன்றாம், நான்காம் நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில், 100 'ப்ரீ இன்கியூபேஷன் சென்டர்' எனப்படும் துவக்க நிலை தொழில் வளர் காப்பகங்கள் அமைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, 47 இடங்களில் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தொழில் வளர் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தொழில் வளர் காப்பகத்துக்கு, தலா 7.50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. தற்போது மீதமுள்ள, 53 தொழில் வளர் காப்பகங்களை அமைக்க, கல்வி நிறுவனங்களுக்கு, ஸ்டார்ட் அப் டி.என்., அழைப்பு விடுத்து உள்ளது. சந்தைக்கு வர ஆலோசனை சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சிறந்த தொழில் திட்டத்திற்கான கருத்து மட்டும் வைத்திருப்பவர்கள், தொழில் வளர் காப்பகத்தை அணுகலாம். அவரின் திட்டத்தை தொழிலாக துவக்கி, பொருளாக உற்பத்தி செய்து, சந்தைக்கு கொண்டு வருவதற்கான ஆலோசனை, உதவிகள் வழங்கப்படும்; தொழில் வளர் காப்பகத்தில் உள்ள அலுவலக வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்'' என்றார்.