வளர்ச்சி சரிவு।: ரிசர்வ் வங்கியை கைகாட்டும் அரசு முன்னாள் கவர்னரின் வட்டி முடிவு மீது அதிருப்தி
புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்ததில், வங்கிக் கடன் வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்காததும் ஒரு காரணம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை சார்பில், மாதந்தோறும் ஆய்வு அறிக்கை வெளியிடப்படுகிறது. நவம்பர் மாதத்துக்கான அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் நுகர்வு தேவை குறைந்ததே, நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் வளர்ச்சி விகிதம் குறையக் காரணமானது. ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள், தேவைகள் குறையக் காரணமாகி இருக்கலாம். இரண்டாவது அரையாண்டில், கிராமப்புற, நகர்ப்புற தேவை அதிகரிக்கும் அறிகுறிகள் தெரியும் நிலையில், வளர்ச்சிக்கு ஆதரவாக, கடன் வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பணக்கொள்கை மறுஆய்வுக் குழுவின் முடிவால் அது நடக்கவில்லை. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. வலியுறுத்தல்
பணவீக்கத்தை 4 சதவீதமாக குறைத்து, கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, வட்டியை ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான பணக்கொள்கை குழு, குறைக்கவில்லை. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர், கடன் வட்டியை குறைக்க வலியுறுத்தி வந்தனர். கணிப்பு குறைப்பு
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி 5.40 சதவீதமாக சரிந்ததும், ஒட்டுமொத்த நிதியாண்டின் வளர்ச்சிக் கணிப்பை பல்வேறு ஆய்வு நிறுவனங்கள், 7 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக குறைத்து விட்டன. தற்போது ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றுள்ள நிலையில், பிப்ரவரியில் நடைபெற உள்ள பணக்கொள்கை குழுவின் கூட்டத்தில், வட்ட விகிதம் குறைக்கப்படலாம் என, பொருளாதார நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.