உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஓய்வுகால திட்டமிடல் தயார் நிலையை அறிவது எப்படி?

ஓய்வுகால திட்டமிடல் தயார் நிலையை அறிவது எப்படி?

வாழ்வியல் செலவுகள் அதிகரிக்கும் சூழலில் ஓய்வுகால திட்டமிடலை உரிய முறையில் மேற்கொள்வது அவசியம் என்பதை உணர வேண்டும்.ஓய்வு கால திட்டமிடலை பொருத்தவரை பலரும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனும் எண்ணத்தையே கொண்டிருக்கின்றனர். எனினும் முதலீடு போலவே, ஓய்வு கால முதலீட்டையும் உரிய காலத்தில் மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே இதை மேற்கொள்வதன் மூலம், ஓய்வு காலத்தில் தேவையான வருமானம் வருவதற்கான தொகையையும் உருவாக்கி கொள்வது சாத்தியம். வாழ்வியல் செலவுகள் மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவை அதிகரித்து வரும் நிலையில், ஓய்வு கால திட்டமிடல் முன் எப்போதையும் விட முக்கியமாகிறது.

நிதி இலக்குகள்

ஓய்வு காலத்திற்கு திட்டமிட்டு சேமிப்பது முக்கியம் என்றாலும், இது சேமிப்பு சார்ந்தது மட்டும் அல்ல; பணியில் ஓய்வு பெற்ற பிறகு, நிதி சுதந்திரம் மற்றும் மன நிம்மதி கொண்டிருப்பதற்கு திட்டமிட உதவுகிறது. எனவே தான் சொந்த வீடு வாங்குவது, பிள்ளைகள் உயர் கல்வி போலவே ஓய்வு காலமும் முக்கியமாகிறது. நடைமுறையில் பார்க்கும் போது, பெரும்பாலானோர் குறுகிய கால நிதி இலக்குகளில் கவனம் செலுத்தும் நிலை உள்ளதே தவிர, ஓய்வு கால திட்டமிடலில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவது இல்லை. அதே நேரத்தில், தொழிலாளர் சேமநில நிதி அல்லது பொது சேமநல நிதி போன்ற பாரம்பரிய ஓய்வு கால சேமிப்பு திட்டங்களை மட்டுமே பலர் நம்பியிருக்கின்றனர். ஓய்வு காலத்தில் இவை கொடுக்கும் என்றாலும், அதிகரிக்கும் தேவைகளுக்கு ஈடு கொடுக்க போதுமானதல்ல. பலரும், மற்ற வாழ்க்கை இலக்குகளுக்கு முன்னுரிமை அளித்து, ஓய்வு கால இலக்கை தள்ளிப்போடுவதும் இயல்பாக இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில், 40 அல்லது 50களில் ஓய்வு கால திட்டமிடலை மேற்கொள்வது சிக்கலானது. எனவே, ஓய்வு கால தயார் நிலையை அறிந்திருப்பது முக்கியமாகிறது.

தயார் நிலை

சிறிய தொகையாக இருந்தாலும் ஓய்வு காலத்திற்கான சேமிப்பை ஆரம்ப நிலையிலேயே துவங்கிவிடுவது நல்லது. நீண்ட கால நோக்கில் இந்த சிறிய தொகை, கூட்டு வட்டி அடிப்படையில் நல்ல பலனை அளிக்கும். எனவே, ஒரு சிறிய தொகையையேனும் ஓய்வு காலத்திற்கு என ஒதுக்கி சேமித்து வர வேண்டும். ஓய்வு காலத்திற்கு தேவையான தொகையை கணக்கிட உதவும் வழிகளும் இருக்கின்றன. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும், இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிய வேண்டும். ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் ஓய்வு காலத்தில் தேவைப்படக்கூடிய தொகை கணக்கிடப்படுகிறது. தேசிய பென்ஷன் திட்டம் போன்றவை ஓய்வு கால திட்டமிடலுக்கு கைகொடுக்கும். மேலும், அதிகரிக்கும் செலவுகளையும், சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பதையும் மனதில் கொள்ள வேண்டும். வயதான காலத்தில் ஆரோக்கியம் முக்கியம் என்பதால், மருத்துவ செலவுகளை சமாளிக்க போதுமான காப்பீடு இருப்பதும் இன்றியமையாதது. அண்மை ஆண்டுகளில் மருத்துவ பணவீக்கமும் அதிகரித்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு, ஓய்வு கால திட்டமிடலை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும். சேமிப்பை முதலீடு செய்வதற்கு ஏற்ற வழிகளையும் பின்பற்ற வேண்டும். தேவை எனில் இதற்காக தொழில்முறை ஆலோசனையை நாடுவதும் ஏற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ