எண்ணெய் வித்து கூடுதல் விளைச்சலால் சமையல் எண்ணெய் இறக்குமதி குறையும்
புதுடில்லி:பாமாயில், சோயா, சூரியகாந்தி உள்ளிட்ட இந்தியா வின் தாவர எண்ணெய் இறக்குமதி, 2024 - 25 பருவ ஆண்டில் குறையும் என தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்த 2023 - 24ம் பருவ ஆண்டில், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி 160 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய பருவத்தில் 165 லட்சம் டன்னாக இருந்தது. நாட்டில் சாதகமான மழையளவு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக, வருகிற 2024 - 25ம் ஆண்டு பருவத்தில், இது மேலும் குறைந்து 150 லட்சம் டன்னாக இருக்கும் என தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த அக்டோபரில் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி, முந்தைய மாதத்தை விட 59 சதவீதம் அதிகரித்து, மூன்று மாதங்களில் இல்லாத உயர்வாக இருந்தது. சமீப மாதங்களில் குறைந்த இறக்குமதி மற்றும் வலுவான பண்டிகை தேவை ஆகியவற்றை ஈடு செய்ய, அக்டோபரில் கொள்முதலை அதிகரித்ததே இதற்கு காரணம் என வினியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
பாமாயில் ஆதிக்கம்
கடந்த 2023 - 24ல், பாமாயில் இறக்குமதி 92 லட்சம் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டில் 98 லட்சம் டன்னாக இருந்தது. அதேசமயம், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 35 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டில் 29 லட்சம் டன்னாக இருந்தது. இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதியில் 60 சதவீதத்தை பாமாயில் கொண்டுள்ளது. இருப்பினும், நடப்பாண்டு பாமாயிலின் விலை அதிகரிப்பால், நுகர்வோர்கள் சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறியுள்ளனர். இதனால், பாமாயில் அதன் சந்தை பங்கில் 2 முதல் 3 சதவீதம் வரை இழக்க நேரிடும்.