உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அதிகரிக்கும் சூரிய மின்சார உற்பத்தி போதிய கட்டமைப்பு வசதியின்றி சிக்கல் துாய எரிசக்தி இலக்கை அடைவதில் முட்டுக்கட்டை

அதிகரிக்கும் சூரிய மின்சார உற்பத்தி போதிய கட்டமைப்பு வசதியின்றி சிக்கல் துாய எரிசக்தி இலக்கை அடைவதில் முட்டுக்கட்டை

புதுடில்லி: நம் நாட்டில் சோலார் மின் திட்டங்கள் வாயிலாக மின்சார உற்பத்தி அதிகரித்து வரும் சூழலில், அதன் கொள்முதலுக்கு போதிய மின்கட்டமைப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார கட்டமைப்பில் சேதத்தை தவிர்க்க, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய சக்தி, காற்றாலை ஆகியவை மின்சார உற்பத்தியை நிறுத்துமாறு அல்லது குறைக்குமாறு கட்டாயப்படுத்தும் நடைமுறை அமலில் உள்ளது. கடந்த அக்டோபரில் சோலார் மின் உற்பத்தி நிறுத்த விகிதம் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிரிட் கன்ட்ரோலர் ஆப் இந்தியா தரவுகளை வெளியிட துவங்கிய கடந்த மே மாதத்தில் இருந்து அதிகபட்ச நிறுத்த விகிதம் இதுவாகும். மேலும், சில நாட்களில் 40 சதவீதம் அளவுக்கு சோலார் மின்சாரத்தை கட்டமைப்பில் ஏற்க மறுக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் சோலார் மின் உற்பத்தி அதிகரிப்பதால், தேவைக்கும், வினியோகத்துக்கும் இடையே இடைவெளி அதிகரித்து இருப்பதை தரவுகள் தெரிவிக்கின்றன. சோலார் மின் உற்பத்தி அதிகரிப்பை காரணம் காட்டி, நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள், மின் உற்பத்தியை குறைக்க முடியாது. சூரியன் மறைந்த பின், தேவையை சமாளிக்க நிலக்கரி வாயிலாக மின் உற்பத்தி தொடர வேண்டும். காற்றாலை மின்சாரத்தில், அரிதாக மட்டுமே தடையை காண முடிந்தது. எனவே, கூடுதல் மின்சாரத்தை சேமித்து, மாலை நேரங்களில் வினியோகிக்க, ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பகங்கள் தேவை என்பதை காட்டுகிறது. இந்தியாவில், 44 ஜிகாவாட் மதிப்பிலான பசுமை மின்சார திட்டங்கள், மின்சாரத்தை வாங்குவதற்கு உரிய கட்டமைப்பு இன்றி, சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன. மின்சாரத்தை வாங்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும் திட்டங்களை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இது, வரும் 2030ம் ஆண்டுக்குள் துாய்மை மின்சார உற்பத்தி திறனை, இருமடங்காக, அதாவது, 500 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் இலக்குக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

தீர்வு என்ன?

பகல் நேரங்களில் சோலார் மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது, அதை முழுதும் சேமிக்க மிகப்பெரிய பேட்டரி கட்டமைப்பு வேண்டும். மாலை அல்லது இரவு நேரங்களில், சோலார் மின் உற்பத்தி இல்லாத சமயங்களில், அந்த மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். எனவே, சோலார் மின் உற்பத்தி அதிகரித்தாலும், அதை சேமிக்கும் உரிய கட்டமைப்பு இருந்தால் மட்டுமே, இந்த மின் திட்டத்தை செயல்படுத்த நிறுவனங்கள் முன்வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி