ஏலக்காய் உற்பத்தியில் மீண்டும் இந்தியா முதலிடம்
கம்பம்: சர்வதேச அளவில் அதிக ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை 1981 - 82க்கு பின் இந்தியா பெற்றுள்ளது. முதலிடத்தில் இருந்த குவாதிமாலா 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் ஏலக்காய் அதிகம் சாகுபடியாகிறது. கேரளாவில் இடுக்கி, கோட்டயம், வயநாடு மாவட்டங்களில் இரண்டு லட்சம் ஏக்கரில் சாகுபடியாகிறது. மே 2025 முதல் அக்டோபர் வரை பெய்த மழையால் 20 சதவீத மகசூல் இழப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் சாகுபடி பரப்பு அதிகரிப்பு, நவீன தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக இந்தாண்டு மகசூல் 32 ஆயிரம் டன் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. சில மாதங்களாகவே நிலையாக சராசரி கிலோ ரூ.2,400 முதல் ரூ.2,700 வரை கிடைத்து வருகிறது. சர்வதேச அளவில் இந்திய ஏலக்காய்க்கு போட்டியாக இருந்து வரும் குவாதிமாலா நாட்டின் உற்பத்தி சாதாரணமாக 45 ஆயிரம் டன்கள். ஆனால் இந்தாண்டு 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. கடந்தாண்டு அங்கு ஏற்பட்ட வறட்சி அதற்கு காரணமாகும். அதேசமயம் 44 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2 சீசன்களிலும், உலக அளவில் ஏலக்காய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை குவாதிமாலா நாட்டிடம் இருந்து, இந்தியா கைப்பற்றியுள்ளது. குவாதிமாலா நாட்டில் ஏற்பட்டுள்ள மகசூல் குறைவால் இந்திய ஏலக்காய்க்கு அதிக ஏற்றுமதி ஆர்டர்களும் கிடைத்து வருகின்றன.