இந்திய ரயில்வே, உலகின் இரண்டாவது பெரிய, சரக்கு ரயில் போக்குவரத்தாக உருவெடுத்துள்ளது. கடந்த 2024- - 25ம் நிதியாண்டில், உலகளாவிய சரக்கு ரயில் குறித்த புள்ளி விபரங்கள், இந்தியாவை நோக்கிய இந்த மாற்றத்தை குறிப்பதாக இருக்கின்றன. கிட்டத்தட்ட 160 கோடி மெட்ரிக் டன் பொருட்களை கொண்டு செல்வதன் வாயிலாக, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை இந்தியா விஞ்சி, உலகளாவிய சரக்கு ரயில் போக்குவரத்து தரவரிசையில், சீனாவுக்கு அடுத்த இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதே காலகட்டத்தில், சீனா சுமார் 400 கோடி மெட்ரிக் டன்களை ரயிலில் கொண்டு சென்றது. அதே நேரத்தில் அமெரிக்கா 150 கோடி மெட்ரிக் டன்களையும், ரஷ்யா 110 மில்லியன் மெட்ரிக் டன்களையும் கையாண்டது. முந்தைய ஆண்டில், இந்திய ரயில்வே கிட்டத்தட்ட 146 கோடி மெட்ரிக் டன் சரக்குகளை ரயிலில் கொண்டு சென்றது, அமெரிக்கா 176 கோடி மெட்ரிக் டன் சரக்குகளை கொண்டு சென்ற நிலையில், இரண்டாம் இடத்தில் இருந்தது. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் முக்கிய பங்கு வகிப்பதால், இந்தியாவின் விரைவான சரக்கு போக்குவரத்துக்கு இவை துாண்டுகோலாகின. அதிகரித்து வரும் சரக்கு ரயில் பெட்டிகள் உற்பத்தி இதற்கு பெரிதும் உதவியது. இது ரயில் நெட்வொர்க்கின் சரக்கு போக்குவரத்து திறனை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், நுாற்றுக்கணக்கான கிலோ மீட்டர் புதிய வழித்தடங்களை சேர்க்க, அரசின் அங்கீகரிக்கப்பட்ட பல அடையாளம் காணும் திட்டங்களும், ரயில்வே உயர்வுக்கு கைகொடுக்கின்றன. பிரத்யேக வழித்தடம் கிட்டத்தட்ட 2,800 கிலோ மீட்டருக்கும் அதிகமான துாரத்தை உள்ளடக்கிய பிரத்யேக சரக்கு வழித்தடங்களில் 96 சதவீதத்திற்கும் மேற்பட்டதை, போக்குவரத்தை ரயில்வே வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த மின்சார அகல ரயில் வழித்தடங்கள், சரக்கு ரயில்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் ரயில் சரக்கு வலையமைப்பில் வேகம் மற்றும் செயல்திறன் இரண்டையும் ஓரளவு மேம்படுத்திஉள்ளது. பிரத்யேக சரக்கு ரயில் நெட்வொர்க் இரண்டு வழித்தடங்களை உள்ளடக்கியது. பஞ்சாபில் உள்ள லுாதியானா மற்றும் பீகாரில் உள்ள சோன்நகர் இடையே 1,337 கி.மீ., நீளமுள்ள கிழக்கு பிரத்யேக சரக்கு வழித்தடம் மற்றும் மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக முனையம் மற்றும் உத்தர பிரதேசத்தின் தாத்ரி இடையே 1,506 கி.மீ., நீளமுள்ள மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடம் ஆகியவை அவை. பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின், 2002 - 07 ஆண்டின் போதே பிரத்யேக சரக்கு வழித்தட திட்டமிடல் துவங்கப்பட்டாலும், 2006ல் திட்டத்துக்கு முறையான ஒப்புதல் இருந்தபோதிலும், பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றன. மார்ச் 2014 வரை மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய ஒப்பந்தங்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 2014க்கு பின், சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்த துவங்கிய அரசு, பிரத்யேக ரயில் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவதில் வேகம் காட்டியது. கடந்த, 2019--20 ஆம் ஆண்டில், முதல் சரக்கு வழித்தடங்கள் துவங்கப்பட்டன. பிப்ரவரி 2024க்குள், கிழக்கு பிரத்யேக சரக்கு வழித்தடம் முழுமையாக முடிக்கப்பட்டது. சீனா முதலிடம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், சீனா கிட்டத்தட்ட 1.62 லட்சம் கிலோ மீட்டர் ரயில் நெட்வொர்க்கில் 4,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான சரக்கு வழித்தடங்களை கொண்டு உள்ளது. இந்த வழித்தடங்கள் முதன்மையாக கனரக நிலக்கரி ரயில்கள், இரட்டை அடுக்கு கன்டெய்னர் போக்குவரத்து மற்றும் மின்மயமாக்கப்பட்ட இரட்டை பயன்பாட்டு பாதைகளாக, அதாவது, சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்து பாதைகளாக உள்ளன. அமெரிக்கா, 2.20 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான, உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்கை கொண்டிருந்தாலும், பிரத்யேக சரக்கு வழித்தடங்களை பெரிதும் இயக்கவில்லை. சரக்கு நடவடிக்கைகளுக்கு பெரிதும் உகந்ததாக இருந்தாலும், அங்கு நெட்வொர்க் பெரும்பாலும் இரட்டை போக்குவரத்தாக உள்ளது. இதேபோல், ரஷ்யாவின் ரயில் நெட்வொர்க் 1.05 லட்சம் கி.மீ., பரவியுள்ளது, டிரான்ஸ்-சைபீரியன் ரயில்வே சுமார் 9,289 கி.மீ.,க்கு இரட்டை பயன்பாட்டு பாதையாக செயல்படுகிறது. ஆனால், விரைவான சரக்கு போக்குவரத்தின் தேவையை உணர்ந்து, இந்தியா பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடங்களில் கவனம் செலுத்துகிறது. தற்போது கிழக்கு கடற்கரையை ஒட்டி 975 கி.மீ., துாரத்துக்கு, விஜயவாடா முதல் இடார்சி வரை பிரத்யேக சரக்கு ரயில் வழித்தட பணிகள் நடக்கின்றன. தெற்கில், மத்கோவானில் இருந்து சென்னை வரை 892 கி.மீ., துார, பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழித்தடங்களில் பணிகள் முடிந்து, போக்குவரத்து துவங்கினால், இந்திய ரயில்வே, சீனாவை மிகவும் நெருங்கி விடும்.